Wednesday, August 08, 2007

சிறுகதை: 'கெளதமனின் வாழ்வு! - வ.ந.கிரிதரன் -



அ. கெளதமனும், மனோரஞ்சிதமும்!

வானமிருண்டு கறுத்துக் கிடந்ததொரு அந்திப் பொழுதில் வழக்கம்போல் கெளதமன் தான் வசிக்கும் 'அபார்ட்மென்ட்' பலகணியிலிருந்து முடிவற்று விரிந்து, பரந்து கிடக்கும் மெல்லிய இருளில் கறுப்புப் படுதாவாகக் காட்சியளிக்கும் நீல வானைப் பார்த்தபடி பல்வேறு விதமான சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்தபோது அவனது சிந்தனைகளில் வழக்கம்போல் அதிக இடத்தினை ஆக்கிரமித்திருந்த சிந்தனையாக 'இருப்பும் அது பற்றிய காரணமும்', அடுத்ததாக 'மனிதரும் அவர்தம் உணர்வுகளும், செயல்களும்' இருந்ததென்பதை நிச்சயமாகக் கூற முடியும். விடைதெரியாப் புதிரெனத் தொடரும் இருப்புப் பற்றிய மெய்ஞான விளக்கவுரைகளென்றாலென்ன, விஞ்ஞான விளக்கங்களென்றாலென்னெ, கற்பனையும்,கருத்தும் கலந்த கவிதைகள், கதைகள், நாவல்கள் அல்லது ஓவியப் படைப்புகளென்றாலென்ன எல்லாமே அவனது சிந்தனையை விரிய வைத்து, ஒருவித தெளிவினைத் தந்து, அவற்றிலாழும்போது ஒருவித பரவசநிலையினைத் தந்து, நடைமுறையினை, நிகழ்காலம் மறந்து காலங்கடந்ததோருலகில் சஞ்சரிப்பதற்கு பெரிதும் உதவுவதால் இவையெல்லாம் அவனுக்கு எப்பொழுதுமே உற்ற தோழர்களாக விளங்கினவென்றும் நிச்சயமாகக் கூறலாம். இருப்பின் சகல பக்கங்களையும் ஆராயும் ஆர்வம் மிக்கவனாக அவன் இருந்த காரணத்தினால்தான் அவனால் சார்பியல்தத்துவம் பற்றியோ, சக்திச் சொட்டுப் பெளதிகம் பற்றியோ, இயற்கையை , சமுதாயத்தை வழிநடாத்தும் அடிப்படைக் காரணிகளைப் பற்றியோ, வறுமையில் வாடும் குழந்தைகள் பற்றியோ, மாசுறும் சூழல் பற்றியோ, மூண்டு வியாபித்திருக்கும் போர்ச்சூழல் பற்றியோ, உயிரணுவின் அற்புதமான ஆற்றல் பற்றியோ, நவீன கலை, இலக்கிய முயற்சிகள் பற்றியோ எப்பொழுதுமே தன்னை ஒருவித அர்ப்பணிப்புடன் கூடிய தேடலுக்கு ஈடுபடுத்த முடிந்ததென்றும் மேலும் அவனைப்பற்றிக் கூறும்பொழுது கூறலாம். நூல்கள் வாசித்தலென்பது, அவை எவைபற்றியதாக இருந்தபோதும், எப்பொழுதுமே அவனது இருப்புடன் பின்னிப்பிணைந்து விட்டதொரு, பிரிக்க முடியாததொரு அம்சமாக இருந்ததற்குக் காரணிகளொன்றாக அவனது உடலில் ஆட்சி செலுத்தும் அவனது அப்பாவின் 'ஜீன்' நிச்சயமாக இருக்குமென்றும் துணிந்தும் கூறலாம். அவனது குறிப்பேட்டிலொருமுறை அவன் பின்வருமாறு எழுதியிருந்ததை வாசித்தல் அவனது உளஆளுமை/இயல்பு பற்றிச் சிறிது அறிதற்கு மேலும் உதவக் கூடும். அக்குறிப்பேட்டில் அவன் பின்வருமாறு எப்பொழுதோ எழுதியிருந்ததை இப்பொழுது வாசிப்பதன் மூலம் அவன்பற்றிச் சிறிது புரிதற்கு முயல்வோமாக.

அதில் அவன் 'எனது குருமார்' எனத் தலைப்பிட்டு எழுதியிருந்த சிறு குறிப்பு வருமாறு: "ஒவ்வொரு மனிதனினதும் வாழ்வினைப் பொறுத்தவரையில் யாரோ ஒருவர் குருவாகவேயிருந்து விடுவது இயல்பு; திருடனுக்குக் கூட ஒரு குரு, அது சூழ்நிலையாக அல்லது மனிதனாக அல்லது எதுவுமேயாக இருந்து விடலாம். இந்நிலையில் என் குரு தவறு, என்னைப் பொறுத்தவரையில் குருமார் பலருள்ளனர். என் சிந்தனை மாற்றத்தினைப் பொறுத்தவரையில் குருமார்கள்: ஐன்ஸ்டன், கார்ல்மார்க்ஸ், சார்ள்ஸ் டார்வின், சிக்மண்ட் பிராய்ட், ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, பாரதியார், மார்க்ஸிம் கோர்க்கி... இவ்விதம் பலரைக் குறிப்பிடலாம். இவர்களைப் பற்றி அல்லது இவர்களது நூல்களையெல்லாம் கரைத்துக் குடித்தவனென்பது இதன் பொருளல்ல. ஆனால் இவர்களது தத்துவங்கள், இவர்களது வாழ்க்கை வரலாறுகள்,.. இவையெல்லாமே புதுமை நாடித் தவித்து ஏங்கித் துடித்துக் கொண்டிருந்த என் நெஞ்சினில் சிந்தனைச் சுவாலையினைக் கொழுந்து விட்டெரிய வைத்து விட்டன; அறியாமை இருளினில் மூழ்கிக் கிடந்த என் சிந்தனைதனைச் சீர்செய்து வைத்து விட்டன. தோல்விகளால் நிலைகுலைந்து, தளர்ந்து, மனமொடிந்து கிடந்திட்ட வேளைகளிலெல்லாம் என் நெஞ்சினில் நிலவிய அச்சம்தனை, திகில், விரக்திதனை, நம்பிக்கையின்மை, ஏக்கம்தனை அகற்றி புத்தெழுச்சிதனை ஊட்டிய அருமருந்துகள் எவையென்று எண்ணுகின்றீர்கள்? இப்பெரியார்தம் வாழ்க்கை வரலாறுகளே! அவர்தம் படைப்புகளே! என் சிந்தனையில் மாற்றத்தினை ஏற்படுத்தியவர்களே மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களென்றால், மேரி கியூரியுட்பட சிறுமி ஆன் பிராங் உட்பட, கட்டடக் கலைஞன் லிகோர் பூசியோ உட்பட சகல பெரியார்தம், அறிஞர்தம், கலைஞர்தம் வாழ்க்கை வரலாறுகளுமே என்னைப் படிப்படியாக மாற்றிக் கொண்டு வந்தன; வருகின்றன; வரும். ஆக, உண்மையில் பார்க்கப் போனால் எனது சரியான குருமார்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? சந்தேகமேயின்றி நூல்கள்தான்; நிச்சயமாகப் பத்திரிகை, சஞ்சிகைகள்தான்; இதற்கும் மேலாக எனது 'உள்ளுணர்வு'தான்; சிறுவயது முதலே என் ஆழ்மனத்தே புதைந்து கிடந்திட்ட ஆசைகளை ஒழுங்கு படுத்தி, சூழல்களிடமிருந்து பாடங்களைக் கற்றிடச் செய்திட்ட, செய்கின்ற உள்ளுணர்வுதான். ஆக இவையெல்லாமே எனது குருமார்களே! வழிகாட்டிகளே! ஓ! உம்மை நான் போற்றுகின்றேன்; உம்மை நான் துதிக்கின்றேன்; உம்மை நான் வணங்குகின்றேன்". இவ்விதமாக இருந்த அவனது குறிப்பொன்றே போதுமானது அவன் எத்தகையதொரு மானுடனென்பதை அறிந்து கொள்வதற்கென்பதையும் நிச்சயமாகக் கூறலாம். சந்தேகமேயில்லாமல், இருண்ட, பரந்ததோர் ஆபிரிக்க வனத்தின் நடுப்பகுதியில் நூல்கள் சூழ அவனை விட்டுவிட்டால், எத்தனை காலமென்றாலும் அவனால் வாழ்ந்து விடக் கூடியதொரு புத்தகப்பூச்சியாக அவனைக் கருதினால் அதிலாச்சரியமொன்றுமில்லைதான், ஆனால் அவ்விதம்தான் மனோரஞ்சிதம் அவனை எப்பொழுதுமே எண்ணிக் கொண்டிருந்தாள்.

யாரிந்த மனோரஞ்சிதமென்று மண்டையைப் போட்டுக் குடைகின்றீர்களா? அவனுக்குத் தெரிந்ததொரு கவிஞர் கூறியதுபோல் 'காமன் சட்டம்' (kaman Law). இன்னும் புரியவில்லையா? 'காமன் லா' (Common-Law). புரிந்ததா? அவள் அவனது 'காமன் லா'வாக இருப்பதால் யாராவது நீங்கள் மேற்படி கவிஞர் குறிப்பிட்டது போலொரு உறவு முறை அவர்களிருவருக்குமிடையில் நிலவும்; நிலவக் கூடுமென நினைத்துக் கிளூகிளூப்படைந்து விடாதீர்கள். பனை மரத்தின் கீழிருந்து பால் குடித்தாலும் கள்ளெனக் கூறும் உலகமொன்றில் வாழ்வதால், ஒரு கூரைக்குள் வாழும் அவர்களிருவரையும் பற்றியும் அவ்விதம் நினைத்தால் அதனால் அவர்களொன்றும் ஆட்சேபிக்கப் போவதில்லை. உண்மையில் அவள் அவ்விதமொரு உறவுக்காகத்தான் அவனிடம் கடந்த ஐந்துவருடங்களாக முயன்று கொண்டிருந்தாலென்றால் ஒருவேளை நீங்கள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுப் போகலாம்; ஆனால் உண்மை. அவளும் அவனைப் போலொரு மனநிலை வாய்க்கப்பட்ட பிறவியென்பதால் அவளிடம் அவனுக்கொரு அளவுமீறாத ஈடுபாடொண்டு உண்டு; அவ்வளவே. அவனது இத்தகைய மனப்போக்குக் காரணமேதாவதுண்டாவென நீங்கள் சிறிது ஆராய விளையலாம்; ஆச்சரியமில்லை. அவன் கடந்தகாலத்து நிகழ்வொன்று அதற்குக் காரணமாயிருக்கக் கூடுமென அவன் கூடச் சிந்திப்பதுண்டு, ஆனால் அது பற்றி அவனுக்குக் கூட ஐயமுண்டு. மகா புலமை வாய்ந்ததொரு உளநல மருத்துவர் வேண்டுமானால் அது பற்றி ஆராய்ந்து தன் முடிவினைக் கூற முடியும். ஆனால் சந்தர்ப்பம் வரும்போது அதுபற்றி நீங்களும் அறிந்து உங்களது கருத்தினை அல்லது முடிவினைக் கூறுவதற்கும் அல்லது அடைவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும். அப்பொழுது அதுபற்றிப் பார்த்துக் கொள்ளலாம்.

"வழக்கம்போல் கவிஞர் தத்துவவிசாரத்தில் ஈடுபட்டு விட்டாரோ?" இவ்விதம் கேள்வியொன்று எழுந்ததுமே, இதுநாள் வரையில் நீங்கள் வாசித்த கதைபுத்தகங்கள் அல்லது திரைப்படங்களின் பாதிப்பின் விளைவாக நீங்கள் இன்னேரம் அந்தக் குரலுக்குரியவள் யாரென்று ஊகித்திருப்பீர்கள்; உங்கள் அந்த ஊகத்தின்படி அந்தக் குரலுக்குரியவள் மனோரஞ்சிதமாக நிச்சயம் இருந்திருப்பாள். நிச்சயமாக உங்கள் ஊகம் பொய்த்திருக்க வாய்ப்பில்லை; நியாயமில்லை என்பதை உறுதிசெய்தபடி எதிரில் அகன்று,ஒடுங்கி, அகன்றிருந்ததொரு உடல்வாகுடன் நின்றவள் சாட்தாத் மனோரஞ்சிதமே.

ஆ. உறவா ? உணர்வா?

மனோரஞ்சிதத்தின் எழில் மிக்க தோற்றம் ஒருகணம் அவன் சிந்தையை அசைத்து மறுகணம் நிதானத்தை வழக்கம்போல் அளித்துவிடவே கெளதமன் அவளது அழகு பற்றியும், அதற்கும் மேலாக அவள் உடல்முழுவதும் வியாபித்துச் சுடர்ந்து கொண்டிருக்கும் ஞானச்சோபை பற்றியும் இன்னுமொரு கணம் எண்ணிச் சிறிது உள்ளூர ஒருவித தண்மை கலந்த இன்பஉணர்வில் மூழ்கி இதுவரை காலமும் அவளுடன் பழகிய அவனது இருப்பின் வரலாறு பற்றி அடுத்தகணத்தில் உணர்ந்து, அறிந்து, களிப்பெய்து, நிலையற்ற இந்த இருப்பினில் எத்துணை பெறுமதி வாய்ந்ததாக அவளுடனான தொடர்பிருக்கிறதென்று வியந்து, இது இவ்விதமே இருப்பின் முடிவுவரை தொடருமா, அவ்விதம் தொடர்ந்தால் அது, இருப்பு, எவ்விதம் பயனுள்ளதாக, நிறைவுள்ளதாக இருக்குமென மேலும் நினைத்து மீண்டுமொருகணம் அவளது எழில்வாய்ந்த தோற்றத்தில் தன் பார்வையினைத் திருப்பிய அதே சமயம்
அவளுடன் அவ்வப்போது நடைபெறும் உரையாடல்கள் பற்றியும் தன் சிந்தையினைத் திருப்பினான்.

"கெளதமன், எதற்காக நீங்கள் உங்களையே தேவையற்று தீக்கோழி தன தலையினை மண்ணினுள் மூடிக் கொள்வதுபோல் மூடி, உணர்வுகளைக் கடந்ததொருவராகக் காட்டுவதற்கு முயன்று, முயன்று கொண்டிருக்கின்றீர்கள். இன்னும் எத்தனைநாள் தான் நான் காத்துக் கிடப்பது? நம் உறவின் பூரணத்துவத்தினை எட்டுவதிலென்ன இன்னுமிந்த தயக்கம். உணர்வுகள், பசிகள் எல்லாமே இருப்பின் இயல்பான தேவைகளென்பதை எப்பொழுதுதான் புரிந்து கொள்ளப்போகின்றீர்கள். எப்பொழுதுதான் எனக்கு விமோசனம் அளிக்கப் போகின்றீர்கள்?"

இவ்விதமான அவளது வினாக்கள் அடிக்கடி தொடருவதொன்றும் புதிரானதல்ல. கெளதமனும், மனோரஞ்சிதமும் ஒருகூரையின் கீழ் இவ்விதம் வாழ்ந்து வந்தபோதும், தம் உணர்வுகளை, எண்ணங்களைப் பரஸ்பரம் பகிர்ந்து வந்தபோதிலும், இருவரும் ஒருவரையொருவர் பூரணமாக இரசித்து, வாழ்ந்திருந்தபோதிலும், அவள் அவர்களுக்கிடையிலான உறவில் பூரணத்துவம் இன்னுமில்லையென எண்ணினாளென்பதை ஏற்கனவே அறிந்தோம்; ஆனால் அதுபற்றிய அவனின் உணர்வுகளோ வேறாக இருந்தனவென்பதை இனி அறிவதற்கு அவன் அவர்களிருவருக்குமிடையிலான உறவானது சாதாரணத்தை விட அசாதாராணமானதென எண்ணுவதும், உணர்வுகளைக் கடந்ததொரு ஞானத்தினடிப்படையிலுள்ளதெனக் கருதுவதும், சாதாரண இருப்பின் விளைவான உணர்வுகளெல்லாம் அவர்களுக்கிடையிலான உறவின் தன்மையினை நிர்ணயிப்பவையாக இருக்கக் கூடாதென்றதொரு முடிவுக்கு உள்ளூர வந்திருப்பதும் முக்கியமான சில காரணங்கள். உறவு முக்கியமெனின் அது உணர்வுகளைக் கடந்துமிருக்க வேண்டும், அவ்விதம் தாக்குப் பிடிக்க முடியாததொரு உறவு பூரணத்துவமற்றதெனறு அவன் நினைத்தால் அவளோ உறவின் பூரணத்துவமே உணர்வுகளின் சங்கமிப்பில்தான் உள்ளதென நினைத்து வந்தாள். உறவா? உணர்வா?
ஒருமுறை அவள் தனது குறிப்பேட்டில் கீழுள்ளவாறு பாரதியின் வசன கவிதையொன்றினை இரவல்வாங்கி எழுதியிருந்ததை அவன் வாசித்ததுண்டு:

'இருப்பின் எழிலென்னை எப்பொழுதுமே இன்பத்திலாழ்த்துகிறது.
இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமையுடைத்து.
காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று. திங்களும் நன்று.
வாந்த்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது. மலை இனிது. காடு இனிது.
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும் , கொடியும்
மலரும், காயும், கனியும் இனியன. பறவைகள்
இனிய.
ஊர்வனவும் நல்லன.
விலங்குகளெல்லாம் இனியவை.
நீர்வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம்.
கெளதமன் நல்லவன்.
இருப்பின் அற்புதமவன்.
இவனுடன் சுகித்து, இன்புற்று,
உடல், உயிர்கலந்து
இருத்தல் இனிது.
கெளதமா?
ஏன் எனை இவ்விதம்
காமத்தில், விரகத்தில்
வாட்டி வதைக்கின்றாய்?
என்றெனை ஏற்றுக் கொள்ளபோகின்றாய்?'

அதனை வாசித்துவிட்டு அவன் தன் குறிப்பேட்டில் கீழுள்ளவாறு எழுதியிருந்ததை அவள் ஒருமுறை அவனது குறிப்பேட்டினைத் திருட்டுத்தனமாக வாசிந்து அவனது பரந்த உள்ளம் கண்டு மெய்மறந்து, ஒருவித பரவைச நிலையெய்தி, இவனைத் தன் துணைவனாகக் கொள்வதற்குத் தானென்ன தவம் செய்திருக்க வேண்டுமென்று மகிழ்வெய்தி, இவனது இந்த உறவு மட்டும் உணர்வுடன் உடலும் கலந்ததாகவிருக்கும் பட்சத்தில் அது எவ்விதமானதொரு பூரணத்துவம் பெற்றதாகவிருக்குமெனச் சிந்தித்திருந்தாள்.

'இந்தப் பிரபஞ்சம் பரந்து கிடந்து விரிகின்றது எந்தவித முடிவுமற்று. இந்த நீலவான்தான் எத்துணை அழகானது; இங்கு வாழும் சாத்தியங்களைக் கொண்ட உயிரினங்கள் அவை எத்தகைய பரிமாணங்களையெடுத்தபோதிலும்தான் எத்துணை எழில்வாய்ந்தவை. பிரமாண்டமானதிந்தப் பிரபஞ்சத்தின்
வெறுமையான, விரிந்து செல்லும் வெளியினூடு சிறு குமிழென விரையுமிந்த நீலவண்ணக் கோள்தான் எத்துணை இனியது. ஆயினுமேன் இந்த நீலவண்ணக் கோள் போர்களினாலும், ஏழ்மை, வறுமை போன்ற துயர்களினாலும் நிறைந்துபோயிருக்கின்றது? சோகங்களால் நிறைந்து போயிருக்கின்றது? எதற்காக? நல்லதொரு கவிதையினைச் சுவைத்துப் படிதின்பம் துய்த்தல்போல் வாழுதற்குரிய இவ்வாழ்வினையேன் மனிதரிவ்விதம் நாசமாக்குகின்றார்? இருப்பின் பொருள், அர்த்தம் அறிதலே அதன் காரணமாகவிருக்கவேண்டியதென்பதையே உணரமுடியாதவண்ணமேன் மானுடர் தாம் விரித்த சமுதாய வலைகளில் சிக்கி அதன் சிக்கவிழ்ப்பதில் தம் பொன்னான நேரத்தினைச் செலவிடுதலிலேயே தம் இருப்பினைக் கழித்து விடுகின்றார்?

'உலகெலாமோர் பெருங்கன வ·துளே
உண்டு உறங்கியிடர் செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலுங் கனவாகும்; இதனிடை
சில தினங்கள் உயிர்க்கமுதாகியே
செப்புதற்கரிதாக மயக்குமால்
திலகவாணுதலார் தருமையலாந்
தெய்விகக் கனவன்னது வாழ்கவே'

இந்த நீர்க்குமிழியினைப் போன்று அடங்கிவிடும் இந்தக் கணப்பொழுதான வாழ்வினுள் சிக்கிக் கிடக்கும் நாகரிக மனிதர்களான நாம் ஆற்றுவதென்ன? நிலையற்ற தற்காலிகமாகவுள்ளது நமது இருப்பு; இருந்துமிதன் நிலையற்றதிதன் தன்மையினை விளங்காமலேனிந்தக் குத்துவெட்டு, அடிதடி? உணவிற்காக சக உயிர்களைக் கொன்றொழித்திடும் அதே சமயம் எமக்குள்ளேயே மோதல்கள், கொலைகள்; போர்! போர்! போரினால் இன்றைய உலகே வெந்து கொண்டு கிடக்கின்றது. தேவைதானா? இவையெலாம் தேவைதானா? இருக்கப் போகின்ற ஒரு சிறு பொழுதினையும் அமைதியற்று ஆவேசமாகக் கழிப்பதின் பயன் தான் யாதோ? இறுதியில் மரணப்படுக்கையிலும் அமைதியில்லை. ஆனால் இன்றைய மானுடத்தின் தேவை: அன்பு! அன்பு! அன்பு! ஆம். பூரணமாக அன்பு செலுத்திடும் தன்மையும், பொறுமையும், சகிப்புத் தன்மையும் அதே சமயம் தீர்க்கதரிசனமிக்க பார்வையும், செயல்களும் ஆக இவையே இன்றைய தேவைகள்...'

கெளதமனின் அறிவுத்தாகமெடுத்த தேடல் கலந்த உணர்வுகளை அறிவதிலொரு இன்பம் அவளுக்கு. தன்னையே அறிந்ததுபோன்றதொரு தெளிந்த உணர்வு ஆட்கொள்ள அவள் தன்னையே மறந்தின்புற்றுக் கிடப்பாள். சில சமயங்களில் அவள் தன் குறிப்பேட்டில் அவனுடன் கற்பனையில் உறவாடி மகிழ்வதுமுண்டு. அவ்விதமான உரையாடல்களின் மாதிரிக்கொன்று கீழே தரப்பட்டுள்ளது.

மனோரஞ்சிதத்தின் குறிப்பேட்டிலிருந்து....

அவள்: கெளதமரின் சிந்தனையின் ஆழத்தினை நானும் அறிந்து கொள்ளலாமா?

அவன்: நீ என் மீது கொண்டிருப்பதாகக் கூறுகின்றாயே அந்தக் காதலுணர்வுகள் சக்தி வாய்ந்ததாகவிருப்பின் என் மனதின் ஆழத்தினை அறிந்து கொள்வதில் உனக்குச் சிரமமேதுமிருக்கப் போவதில்லை.
அவள்: அப்பாடா! ஒரு வழியாகக் காதலைப் பற்றிக் கொஞ்சமாவது சிந்திக்கத் தொடங்கி விட்டாரே கெளதமர். ஆச்சரியம்தான்... ஆனால்...
அவன்: ஆனால்....
அவள்: ஆனால்... காதலைப் பற்றிச் சிந்திக்க முடிந்தவருக்குக் காமத்தினை உணரமுடியாமல் போவதேனோ? காமம் கலந்த காதலாலன்றோ இந்த
இருப்பு உயிர்த்துடிப்புடன் விளங்குகின்றது. கெளதருக்குப் புரியவில்லையா? அல்லது புரியாததுபோல் நடிக்கின்றாரா?
அவன்: காமத்தைக் கடந்த காதல் இருக்கக் கூடாதா? உணர்வு தாண்டிய உறவு துளிர்க்கக் கூடாதா? காமத்துடன் கூடிய உறவினை விட ஞானத்துடன் கலந்த உறவிலுள்ள இன்பத்தினை அறிய முடியாத அப்பாவிப் பெண்ணாகவிருக்கின்றாயே?

இ. மனோரஞ்சிதத்தின் மனோதிடம்!

கெளதமனின் உளநிலையினை மாற்றுவதெவ்விதம்? ஆடியில் தன்னை ஒருகணம் பார்த்த மனோரஞ்சிதம் தன்னெழில்கண்டு ஒருகணம் தானே கிறங்கினாள். தன் பருத்த முலைகண்டு, புடைத்த குறங்கின் அசைவினில் ஆடாத இவனென்ன ஆடவன்? ஆடைகளை ஒவ்வொன்றாக அகற்றித் தன்னையே இரசித்தாள். இன்று கெளதமனை ஒரு கை பார்த்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டவளாகக் கட்டிலில் ஆடைகலைந்து படுத்திருந்தாள் மனோரஞ்சிதம். விசுவாமித்திரன் முன் கெளதமன் எம்மாத்திரமென எண்ணினாளோ? இன்று அவனை ஒரு கை பார்த்து விடவேண்டுமென திட்சங்கற்பம் செய்து கொண்டவளாக அவனை எதிர்பார்த்துப் படுக்கையில் காத்திருந்தாள் அவள். தன்னெழில் கண்டு அவன் சித்தம் நிலைகுலைய
மாட்டானா என்று ஒருவித எதிர்பார்ப்புடன் காத்து நின்றாள்.

வெளியிலிருந்து தன்னிருப்பிடம் திரும்பிய கெளதமனை அவளது நிர்வாணம் வரவேற்றது. படுக்கையில் புகபெற்றதொரு ஓவியமொன்றில் நிர்வாணமாகச் சாய்ந்து படுத்திருக்குமொரு பெண்ணைப் போல் படுத்திருந்த அவளது தோற்றம் கண்டு அவனது சித்தம் கலங்கியதா? அவளை அவனது பார்வை ஒரு கணத்தில் தலையிலிருந்து உள்ளங்கால்கள்வரையில் ஆராய்ந்து பார்த்தது. விரிந்திருந்த அளகபாரத்தை, அழகிய கண்களை, சிவந்த உதடுகளை, விம்மிப் புடைதிருந்த மார்புகளை, கொடியிடையினை, அகன்றிருந்த இடுப்பினை, தொடைகளையென ஒருகணம் நோக்கினான் அவன். எதற்காக இன்று இவ்விதம் இவள் இவ்விதம் நடந்துகொள்கிறாளெனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டவன் இவ்விதம் அவளைப் பார்த்துக் கேள்வியினைத் தொடுத்தான்:

"மனோரஞ்சிதம்! நீ எவ்வளவுதூரம் நமக்கிருவருக்கிடையில் நிலவும் உறவினை மாசுபடுத்தி விட்டாய்?"

அதற்கவள் படுக்கையிலிருந்து எழும்பாமலேயே, "என்ன நம் உறவினை மாசு படுத்திவிட்டேனா? இவ்வளவு நாட்களாகக் காத்துநிற்கின்றேனே.. உங்களுக்கு என் நிலை இன்னும் புரியவில்லையே.... இயற்கையின் தேவையினை, காலத்தின் கட்டாயத்தினைத் தாங்களேன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. எதற்காக ஓடிஓடி ஒளிந்து கொள்கின்றீர்கள்? நாணத்தை விட்டுத்தான் கேட்கின்றேன். என்னை ஏற்றுக் கொள்வதிலென்ன தயக்கம்?" என்று பதிலுக்குக் கேள்வி கேட்டாள்.

கெளதமன் அவளை மீண்டுமொருமுறை நோக்கினான். அவளது அங்கங்கள் ஒவ்வொன்றிலும் சுடர்ந்து கொண்டிருந்த இச்சையினைத் தூண்டுமெழிலினை அவன் கண்டானா?

"மனோரஞ்சிதம். உனது உடலின் அங்கங்களின் எழில்காட்டி என்னை மயக்குமளவுக்குத் தாழ்ந்து போய் விட்டாயே? எவ்வளவுதூரம் நம் உறவினைச் சிறுமைப் படுத்தி விட்டாய்? இருப்பின் அர்த்தம்தனை அறியத் துடித்துக் கொண்டிருக்குமென்னை அதன் அறியாமைக்குள் சிக்கவைத்திட முனைந்து விட்டாயே?"

"கெளதமா! என்ன இருப்பின் அறியாமையா? காமம்தானே படைப்பின் ஆதாரம். அதில்லாவிட்டால் நானில்லை. ஏன் நீருமில்லையல்லவா? அது கண்டு விலகியோடுவதிலென்ன நியாயம்? என் தேவை நியாயமானதொன்றல்லவா?"

"நமக்கிடையிலுள்ள உறவின் ஆழத்தைக் காமம்தான் நிர்ணையிக்க வேண்டுமென நீ நினைப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகின்றது. உன் உடலின் அவயங்களின் நேரத்தியில், எழிலில் என் நெஞ்சில் காமம் கட்டவிழ்ந்து பாயவில்லையே. படைப்பின் நேர்த்தியில் சுடர்விடும் உனது அங்கங்கள் ஒவ்வொன்றும் எனக்கு இருப்பின் இரகசியத்தையல்லவா கட்டியங்கூறி நிற்கின்றன. என்னை மீண்டும் மீண்டும் இவ்விதம் கட்டிப் போட முனைந்து விடாதே. நம் உறவின் அடிப்படையே இந்தப் புரிதல்தானே. இருப்பினை மீறுதற்கு முயலுமென்னை நீ மீண்டும் மீண்டும் அதற்குள் கட்டிப் போட முனைவதென்ன நியாயம்? இதுதான் உனக்குத் தேவையென்றால் உனக்கு நானெதற்கு? எனக்குத்தான் நீயெதற்கு? உனக்கு 'நான்' தேவையா? அல்ல
திந்த என் வலிய வனப்பான உடல் தேவையா? அறிவு துலங்குமென் உறவு உனக்குத் தேவையா? அல்லது உணர்வின் சங்கமத்தில் மூழ்க இந்த உடல் தேவையா? அன்று சித்தார்த்தன் உறவுகள் துறந்தோடினான் ஞானம்பெற. நான் அவ்விதம் ஓடவில்லையே மனோரஞ்சிதம். உறவு துறந்து, உணர்வு கடந்து என் தேடல் தொடரவில்லையே. உணர்வடக்கித் தொடருமிந்த உறவினூடல்லவா நான் என் தேடலைத் தொடருகின்றேன். ஆனால் நீயோ .. மீண்டும் மீண்டும் உன் உணர்வு வலைக்குள் சிக்க வைக்க முயன்று கொண்டிருக்கின்றாய். அதன் மூலம் நம்முறவின் சிறப்பினையும் மாசுபடுத்த முனைகின்றாயா? சொல். மனோரஞ்சிதம். சொல்."

கெளதமனையே மீண்டுமொருமுறை உணர்வு பொங்கப் பார்த்தாள் மனோரஞ்சிதம். மறுகணமே தன்னுணர்வடக்கியெழுந்தாள்.

"கெளதமா! இதுதான் உன் முடிவென்றால் நான் உன்னை இனியும் வற்புறுத்தப் போவதில்லை. நம்முறவுக்கு எதுவுமே குறுக்கே வராமல் பார்த்துக் கொள்கிறேன். உணர்வடக்கிய உறவுதான் தேடலுக்கு அவசியமென்று நீ நினைக்கும் பட்சத்தில் நான் அதற்குக் குறுக்கே வரப்போவதில்லை. எனக்கு என் உணர்வினை விட எம்மிடையேயுள்ள உறவுதான், உன்மேல் நான் கொண்ட காதல்தான், முக்கியமானது. அதனை இழப்பதற்கென்னால் ஒருபோதுமே முடியாது. என்றாவதொருநாள் நீ உணர்வுடன் கூடிய உறவின் மூலம் உன் தேடலினைத் தொடர எண்ணினால் அதுவரையில் நான் பொறுமையுடன் காத்து நிற்பேன்"

இவ்விதமாகக் கூறியெழுந்தாள் மனோரஞ்சிதம். கெளதமன் மீண்டுமொருமுறை அவளை நோக்கினான். அவளது அங்கங்கள் ஒவ்வொன்றிலும் சுடர்ந்த ஞானத்தினொளியில் அவன் தன்னை மீண்டுமொருமுறை மறந்தான்; துறந்தான்.
ngiri2704@rogers.com
நன்றி: திண்ணை.காம்; ஜனவரி 7, 2006 பதிவுகள் ஜனவரி 2005; இதழ் 73

No comments: