Tuesday, July 18, 2006

நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ , நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க நகைப்பினை
உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.

எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன்காட்டில்
மழைதான்.
அதற்காக மனந்தளர்வதென்
பண்பல்ல.
ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவன்று.
பின்
உனைப் புரிதல்தான்.

ஓரெல்லையினை ஒளிச்சுடருனக்குத்
தந்துவிடும் பொருளறிந்த எனக்கு
அவ்வெல்லையினை மீறிடும்
ஆற்றலும், பக்குவமும் உண்டு;
புரியுமா?

வெளியும், கதியும், ஈர்ப்பும்
உன்னை,
உன் இருப்பினை
நிர்ணயித்து விடுகையில்
சுயாதீனத்துடன் பீற்றித் திரிவதாக
உணரும் உன்
சுயாதீனமற்ற, இறுமாப்புக்கு
அர்த்தமேதுமுண்டா?

இடம், வலம் , மேல், கீழ்.
இருதிசை, நோக்கு கொண்ட
பரிமாணங்களில்
இதுவரையில்
நீ
ஒருதிசையினைத் தானே காட்டி
புதிருடன் விளங்குகின்றாய்?

உன் புதிரவிழ்த்துன் மறுபக்கத்தைக்
காட்டுதலெப்போ?

இரவி , இச் சுடர்
இவையெலாம் ஓய்வாயிருத்தலுண்டோ?
பின் நான் மட்டுமேன்?

நீ எத்தனை முறை தான்
உள்ளிருந்து எள்ளி நகைத்தாலும்
மீண்டும் மீண்டும்
முயன்று கொண்டேயிருப்பேன்.
நீ போடும் புதிர்களுக்கு
விளக்கம் காணுதற்கு
முயன்று கொண்டேயிருப்பேன்.

வேதாளங்களின் உள்ளிருந்து
எள்ளி நகைத்தல் கண்டும்
முயற்சியில் முற்றுந் தளராதவன்
விக்கிரமாதித்தன் மட்டும்தானா?

நன்றி: திண்ணை.காம், பதிவுகள்.காம்

எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு

முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர்.
ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா!
உனக்குத்தான் அனுப்புகின்றேனிச்
செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
'காலத்தின் மாய' வேடங்கள்.
ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன்.
எங்கேனுமோரிடத்தில்
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு
தானிருக்கின்றாய்.
ஆம்! வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
காடுகளில் ,
குகைகளில்
அல்லது கூதற்குளிர்படர்வரைகளில்
உன் காலத்தின் முதற்படியில்...
அல்லது விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக் கிடக்கும் மமதையிலே..
சிலவேளை போர்களினாலுந்தன்
பூதலந்தனைப் பொசுக்கிச் சிதைத்தபடி
அறியாமையில்...
ஒருவேளை அதியுயர் மனத்தன்மை
பெற்றதொரு அற்புதவுயிராய்...
ஆயினும் உன்னிடம் நான்
அறிய விரும்புவது ஒன்றினையே..
'புரியாத புதிர்தனைப்
புரிந்தவனாய் நீயிருப்பின்
பகர்ந்திடு.
காலத்தை நீ வென்றனையோ?
அவ்வாறெனின் அதையெனக்குப்
பகர்ந்திடு.
பின் நீயே
நம்மவரின் கடவுள்.
காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்
நம்மவர்.
இன்னுமொன்று கேட்பேன்.
இயலுமென்றா லியம்பிடு.
இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ?
இதனை நீ அறிந்தனையோ?
உண்டெனில் அர்த்தம் தானென்ன?
சிலர் அர்த்தமற்ற வாழ்வென்பர்.
யான் அவ்வாறல்லன்.
அர்த்தம்தனை நம்புபவன்.
ஆயினும் அதனையிதுவரை அறிந்திலேன்.
அதனை நீ அறிந்திடின்
அதனையிங்கு விளக்கிடு.
அது போதும்! அது போதும்!

நன்றி: திண்ணை.காம், பதிவுகள்.காம்
ngiri2704@rogers.com

விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பற்றிய சில குறிப்புகள்! ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார்கள். இவர்களது குறிப்புகளெல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. இவர்களில் பலர் யானை பார்த்த குருடர்கள். நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாதம், கெªஸ்துபம், மணிமுடி. ஹேமந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரம் பற்றிய கதையினைக் கூறி முடித்ததும் வசந்தன் என்னும் பாணன் கூறத்தொடங்குவதுடன் ஆரம்பமாகும் நாவல் மூன்று பாகங்களாக விரிவடைந்து வசந்தன் கதையை முடித்ததும் இன்னுமொரு பாணனான கிரிஷ்மன் மீண்டுமொருமுறை விஷ்ணுபுரம் கதையினைக் கூறத்தொடங்குவதுடன் தொடர்கிறது. நாவலைப் பற்றிப் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ' இந்நாவலில் விஷ்ணு ஒருமுறை புரண்டு படுக்கிறார். தருக்கம், தியானம்,கற்பனை என்ற மூன்று அடிப்படையான அறிதல் முறைகளில் கற்பனையின் துணை கொண்டு , பிற இரண்டின் சாத்தியங்களை பயன்படுத்தியபடி, மானுடனின் ஞானத்தேடலின் பயணத்தைச் சித்தரிக்கிறது (சித்திரிக்கிறது). கலையும், தருக்கமும், ஆன்மீகமும், மானுட உணர்வுகளுடன் கலந்து பெªராணிகமான மாய உலகமொன்றைப் படைக்கின்றன.' ஜெயமோகனின் ஞானத் தேடலே நாவலாக உருப்பெற்றிருக்கின்றது. இந்து, பெªத்த தத்துவங்களினூடு மனித வாழ்வு, பிரபஞ்சத்தின் தோற்றம், காலம் பற்றி தர்க்கரீதியாகக் கற்பனையைப் படரவிட்டு இந்நாவலைப் படைத்திருக்கின்றார் ஜெயமோகன். தான் அறிந்ததை, உணர்ந்ததை அவ்விதமே கூறவேண்டுமென்ற ஆவல் ஜெயமோகனுக்கு அதிகமாக இருப்பதை நாவல் முழுவதிலும் காண முடிகிறது. விஷ்ணுபுரம் பற்றிய வர்ணணைகளில் நாவலாசிரியர் மிக அதிகளவில் கவனமெடுத்திருக்கின்றாரென்பதை விஷ்ணுபுரம் பற்றிய வர்ணனைகள் வெளிக்காட்டுகின்றன.ஜெயமோகனின் ஞானத்தேடலே நாவல் முழுக்கப் பல்வேறு பாத்திரங்களாக, பிங்கலன், சங்கர்ஷணன்.. என உலாவருகின்றது. நாவல் முழுக்க எண்ணமுடியாத அளவிற்குப் பாத்திரங்கள். அத்தியாயத்திற்கு அத்தியாயம் புதிய புதிய பாத்திரங்களின் வருகையுடன் நாவல் நடை போடுகிறது. வழக்கமாக அத்தியாயங்களிற்கிடையில் ஒருவித தொடர்ச்சியினை ( Linearity) எதிர்பார்த்துப் பழக்கப் பட்டு விட்ட பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு இந்தத் தொடர்ச்சியற்ற தன்மை நாவலைப் புரிதலில் சிரமத்தினை ஏற்படுத்தி விடுகின்றது. இது இந்நாவலை வாசிக்க விளைபவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுமையினையும் , பாத்திரங்களைச் சம்பவங்களைக் கிரகிக்க வேண்டிய திறமையினையும் மிக அதிகமாகவே வேண்டி நிற்கிறது. ஆனால் இந்த நாவலின் அடிப்படையே ஒரு மனித உயிரின் ஞானத் தேடல் என்ற அளவில், நாவல் பாத்திரங்களினூடு, நகர அமைப்பினூடு, காட்சிகளினூடு, கூறி விவாதிக்கும் இருத்தல் பற்றிய விசாரத்தைத் தொடர்ந்து கொண்டு போவதன் மூலம் இந்நாவல் பிரதியின் வாசிப்பை இலகுவாக்கலாம். பலருக்கு இந்நாவல் புரிபடுவதிலுள்ள குழப்பம் காரணமாகத் தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கருத்துகளை வைக்கின்றார்கள். (அண்மையில் ஜெயமோகனின் நூல் விழாவில் பேசிய ஜெயகாந்தன் தன்னாலேயே நாவலின் உள்ளே புக முடியவில்லை என்று குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது). நாவல் பற்றி ஈழத்தின் முற்போக்கு முகாமைச் சேர்ந்த அறிஞர் அ.ந.கந்தசாமி தனது 'மனக்கண்' என்ற நாவலின் முடிவுரையில் 'என்னைப் பொறுத்தவரையில் பாரகாவியமும் நாவலும் ஒன்றென்றே நான் கருதுகிறேன். ஒன்று வசனம், மற்றது கவிதை என்ற வித்தியாசத்தைத்தவிர பாரகாவியம் எப்பொழுதுமே அவசரமாகக் கதையைச் சொல்லத் தொடங்குவதில்லை. நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, பருவ வர்ணனை என்று மெதுவாகவே அது கிளம்பும். காரின் வேகம் அதற்கில்லை. தேரின் வேகமே அதற்குரியது. வழியிலே ஒரு யுத்தக் காட்சி வந்ததென்று வைப்போம். உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது. பாண்டவர் வென்றனர், கெªரவர் தோற்றனர் என்று மிகச்சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவ்வாறு எழுதினால் கதா நிகழ்ச்சியை நாம் புரிந்து கொண்டாலும் யுத்தத்தின் அவலத்தையும் வெற்றி தோல்வியையும் நேரில் பார்த்தது போன்ற உணைச்சி நமக்கு ஏற்படாது. அந்த உணர்ச்சி நமக்கு ஏற்படும்வரை பொறுமையாக விவரங்களை ஒன்றின் பின்னொன்றாகச் சலிப்பின்றி எடுத்துக் கூறி நிற்கும் ஆற்றல் பெற்றவனே பாரகாவியஞ் செய்யும் தகுதியுடையவன். நல்ல நாவலாசிரியனுக்கும் இப்பண்பு இருக்கவேண்டும்.' என்று கூறியுள்ளதுதான் நினைவுக்கு வருகின்றது.ஜெயமோகனுக்கு இப்பண்பு நிறையவேயுண்டு. விஷ்ணுபுரம் பற்றிய அவரது வர்ணனைகள் வாசிப்பவரிடத்தில் அதன் பிரமாண்டம் பற்றியதொரு பிரமிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இருத்தல் பற்றிய மானுடத்தின் ஞானத் தேடல் என்ற சிறியதொரு கருவுக்கு விஷ்ணுபுரம் என்றொரு பிரமாண்டமான நகரினைப் பல்வேறு பாத்திரங்களினூடு படைத்து, நமது காவியங்களில் கையாளப் பட்டதொரு உத்தியினைப் ( பாணன் கதை சொல்லல்) பாவித்துக் கதை சொல்லியிருக்கின்றார் ஜெயமோகன்.ஆனால் மெய்ஞானம் மட்டுமின்றி நவீன விஞ்ஞானத்தினூடும் இருப்பு பற்றிய தேடலில் மூழ்கிக் கிடப்பவர்களை இந்த நாவல் கவருமா என்பது சந்தேகத்திற்கிடமானதே.எல்லாக் கதாப் பாத்திரங்களும் கதைகளாக மாறிவிடுகின்றதொரு உண்மையில் முழு நாவலுமேயொரு கதைதான். புராணக் கதை.திரிசாகரம் திரிவிக்கிரமர் இயற்றிய மகாபத்மபுராணம். பாணர்கள் கதைசொல்வதிலுள்ள ஒழுங்கு மாறியிருப்பதாகவும் கருத இடமுண்டு. பொதுவாகக் கதைகூறும்பொழுது சில சமயங்களில் ஒழுங்குகள் மாறிக் கதை சொல்வதுமுண்டு. ஆனால் விஷ்ணுபுரத்தில் வரும் விளக்கங்களும் இந்நாவலினூடு விரவிக் கிடக்கும் இருப்பு பற்றிய தேடலும் விரைவாக இந்நாவல் கூறும் பொருள் பற்றி நம்மை வந்தடைவதைத் தடுத்து விடுகின்றன. வாசிப்பவர்களைச் சிந்திக்க, தர்க்க ரீதியாகச்சிந்திக்கப் பெரிதும் தூண்டும் படியாக நாவலின் சம்பவங்களை நடத்திச் செல்லும் தொடர்ச்சி (Plot) இருந்து விடுவது இதன் காரணம். அதே சமயம் எல்லோராலும் இந்நாவலைப் படிக்கவும் முடியாது. ஏற்கனவே ஓரளவு பிரபஞ்சத் தேடல் மிக்க அல்லது தீவிர வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே இந்நாவலின் வாசகர்களாகவும் வரமுடியும்.

இன்னுமொன்றினையும் இந்நாவலின் அமைப்பில் காணமுடியும். பொதுவாக மூன்று பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருப்பதால் இந்நாவலின் மிகவும் முக்கியமான பகுதி மூன்றாவது பாகமான 'மணிமுடி'யென்றேபலர் எண்ணி விடக் கூடும். ஆனால் நாவலின் மிகவும் முக்கியமான, மையமான பகுதி இரண்டாவது பகுதியான 'கெªஸ்துபம்' என்றே எனக்குப் படுகிறது. இருப்பு பற்றிய, பிரபஞ்சத்தின் இருப்பு பற்றிய சாங்கியம், சைவம், சமணம், பெªத்தமெனப் பல்வேறு மதப் பிரிவுகளின் கோட்பாடுகளை மிகவும் தர்க்க ரீதியாக ஆராயும் பகுதியிது. சில சமயங்களில் தர்க்கம் சிரிப்பினூடு சிந்திக்கவும் வைத்து விடுவதாக அமைந்து விடுகின்றன. உதாரணமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

வாசற்காவலன் தடுத்தான். சித்தன் "ஞானசபைக்கு " என்றான். "யார் நீங்கள், சார்வாகனர்களா?" "இல்லை"

"காளாமுகர் போலிருக்கிறது"

"அதுவுமில்லை"

"காபாலிக மதமா?"

"அதுவும் இல்லை"

"சாக்தேயரோ, தாந்திரிகரோ ஆக இருக்கக் கூடும்"

"எதுவுமே இல்லை"

"அப்படியானால்?"

"எதுவும் இல்லை. அதுதான் எங்கள் மார்க்கம்"

"புரியவில்லை"

"சூனியம். ஒரு சூனியம் வந்துள்ளது என்று உன் பண்டிதர்களிடம் போய்க் கூறு"

"அதுயார் குட்டிச் சூனியமா" என்றான் காவலன்.

" யாரடா நீ பயலே? பார்த்தால் பிராமணக் களை தெரிகிறதே"

"சூனியத்திலிருந்து பிறந்த சூனியம்" என்றான் காசியப்பன். "அதன் பிறகும் சூனியமே எஞ்சுகிறது" [ பக்கம் 445, பகுதி இரண்டு]

"சுடாத தீ உண்டா?" "உண்டு. நீரின் ஆத்மாவிற்கு" [ பக்கம் 479 ]

ஸ்யாத்வாதம் பிரபஞ்சத்தின் எவராலும் உற்பத்தி செய்யப் பட்டதல்ல என்று கூறும். இவ்விதமே இருந்து வந்தது எனக் கூறும். நவீன வானியற்பெªதிகத்தின் ( Astro Physics) பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகளிலொன்றான 'உறுதி நிலைக் கோட்பாடு' (Steady State Theory)தனை இது நினைவு படுத்தும். காலம், சார்புநிலை பற்றியெல்லாம் தர்க்கரீதியான உரையாடல்களில் மிகவும் விரிவாகவே குறிப்பிடப் பட்டிருக்கின்றன. பல்வேறு பட்ட சமயப் பிரிவுகள் கூறும் பிரபஞ்சம், காலம், இருப்பு பற்றிக் கூறும் கோட்பாடுகளெல்லாம் நவீன வானியற் பெªதிகம், சக்திச் சொட்டுப் பெªதிகம் (Quantam Physics) போன்றவையும் விஞ்ஞானபூர்வமாகக் கூற ஆரம்பித்திருக்கின்றன. ஐன்ஸ்டைனின் வெளி, காலம் பற்றிய சார்பியற் கோட்பாடுகள், பொருள், சக்தி, விசை பற்றிய கோட்பாடுகள், அடிப்படைத் துணிக்கைகள் பற்றிய பெªதிகம் (Particle Physics) கூறும்அடிப்படைத்துணிக்கைகளின் உருவற்ற/உருவமான நிலை, அதன் நிச்சயமற்ற நிலை பற்றிய விதிகள் ( Principle of uncertainity), வெற்றிடம், வெற்றிடத்திலிருந்து பொருள் உருவாவது பற்றிய கோட்பாடுகள், பொருள், எதிர்ப் பொருள் (Anti matter), பிரபஞ்சம்/எதிர்ப் பிரபஞ்சம்..போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவ்வகையில் விஷ்ணுபுரம் நாவலின் பிரபஞ்சம் பற்றிய ஞானத் தேடலில், நவீன பெªதிகத்தையும் எதிர்காலத்தில் ஜெயமோகன் சேர்த்துக் கொள்வாரென்றால் இந்நாவல் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்துவதற்குச் சாத்தியமுண்டு. இல்லாவிட்டாலும் கூட இந்நாவலில் கூறப்பட்டுள்ள கீழைத்தேயத் தத்துவங்களினூடான தேடல் அறியும் ஆர்வமுள்ள நெஞ்சினருக்குப் பெரு விருந்தாக அமையும் சாத்தியமுண்டு. ஆனால் இந்நாவலப் படித்து முடிப்பவருக்கு வரும் முக்கியமான உணர்வு அல்லது அதனால் அவர் அடையும் இன்பம் முக்கியமாக ஆத்மீகத் தேடலாகவே இருக்கும்.

இந்நாவலில் இன்னுமொரு விடயத்தையும் அவதானிக்க முடிந்தது. முதலாம் பகுதி விஷ்ணுபுரத்தின் சிறப்பைக் கூறும். இரண்டாம் பகுதியோ அங்கு நிகழ்ந்த தர்க்க சிறப்பினைக் கூறும். ஆனால் மூன்றாவதான இறுதிப் பகுதியோ கனவாகிப் போன விஷ்ணுபுரச் சிறப்பினை எண்ணி ஏங்கிப் பிரளயத்தில் அழிந்து போவதைக் குறிப்பிடும். அதே சமயம் இரண்டாவது பகுதியின் தோற்றுவாயிலேயே விஷ மேகங்கள் பொழிந்த நீல மழையில் அழிந்து போய் விடும் விஷ்ணுபுரத்தைப் பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றது இது ஏற்கனவே நிகழ்ந்ததொரு கதையைக் கூருவதை நினைவு படுத்துவதற்காகவா? விஷ மேகம், நீல மழை, நெருப்பு ஆறான சோனா, அதன் செம்மைக்குக் காரணமான, சிலப்பதிகாரத்தை நினைவு படுத்தும் இன்னொரு உபகதை இவ்விதமாக ஒரு விதக் காவியச் சுவையுடன் விரியும் விஷ்ணுபுரத்தைப் பற்றிப் பல்வேறு கோணங்களிலும் விவாதிப்பதே அதனை முழுமையாக இனங்காண வைக்குமென்பதால், புரிய வைக்குமென்பதால் தொடர்ந்து விவாதிப்போம். கடுமையாக விவாதிப்பதில், தர்க்கிப்பதில் வறில்லை. நாவல் கூறுவதைப் போல் தர்க்கம் 'எதையும் சாராத தர்க்கமாகவோ, வெறும் தர்க்கமாகவோ, தருக்கம் மட்டுமேயான தர்க்கமாகவோ, தன்னையே உடைத்து விடும் தர்க்கமாகவோ' [பக்கம் 436] இருந்து விடுவதிலும் தவறில்லையென்பது என கருத்து. -

இந்நாவலில் வரும் பிங்கலன், மாகவி சங்கர்ஷணன் ...இவர்களைப் போன்றவார்கள் எவ்விதம் படைக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பதை ஒரு கணம் பார்ப்போம்.. பிங்கலனை சித்தார்த்தரின் பாதிப்பில் படைக்கப் பட்டதொரு பாத்திரமாகவும், சங்கர்ஷணனை சிலப்பதிகாரம், கெªதமர் சரித்திரம் ஆகியவற்றின் பாதிப்புகளாகப் படைக்கப் பட்டிருக்கலாமென்பதற்கு நாவல் முழுக்க பல சான்றுகள் உள்ளன.

இந் நாவலில் வரும் கணிகையர்களெல்லாம் சாருகேசி, பத்மாட்சி போன்றவர்கள் ஆழ்ந்த அறிவுத் தேடலுள்ளவர்கள். ஞானத்தின் பாரத்தால் அழுந்தி உதிரப் போகுமொரு பதர் தான் இந்தப் பிங்கலன் என்பதை இவர்களிலொருத்தியான சாருகேசி இலகுவாகவே உணர்ந்து கொள்ளும் பக்குவம் வாய்ந்தவள். இந்த விஷ்ணுபுர நாவலைப் படைத்த சங்கர்ஷ்ணனே ( நாவலிற்குள் நாவல்) பத்மாட்சியிடம் உரையாடுவதாக உள்ள உரையாடலே விஷ்ணுபுரத்தின் உண்மையான விளக்கத்தை அளிப்பதற்குப் போதுமானது.[பக்கங்கள் 359,360]

"பத்மா உண்மையச் சொல். என் காவியம் எப்படி இருக்கிறது?" என்றான்.

"மண்ணில் கால் பாவாத வெற்றுக் கற்பன இது. இதோ சற்றுமுன் மனிதர்கள் மத்தியிலிருந்து வருகிறேன். அழுக்கு, பசி, இச்சை, போதை, வெறி, உழைப்பு, இதெல்லாம் தான் மனிதர்கள். உழைப்பும், அடிமைத் தனமும், அதிகாரமும் மட்டும்தான் நிதரிசனம். லட்சியக் கனவுகளை உண்டு பண்ணி மனிதன் தன் வாழ்வின் அவலங்களுக்குத் திரை போடுகின்றான். நான் கனவில் நடந்து ஏதோ தெரியாத இடத்தில் கண்விழித்துப் பதைக்கும் மூடன்."

"உண்மையச் சொல்.இந்தக் காவியத்தில் மனித வாழ்வா இருக்கிறது. ஒவ்வொரு சர்க்கமும் உச்சக் கட்ட உத்வேகம் நோக்கி எடுத்துச் செல்லப் பட்டுள்ளது. அழகும் நளினமும் இதில் இல்லை. கட்டற்ற மொழி. உடைபெடுக்கும் ஆவேசம். இந்நூலை ஞான தரிசனம் வழி நடத்தவில்லை. எழுதும் கணங்களில் நானே என்னைத் தூண்டி விட்டு அடைந்து கொண்ட போலியான மனஎழுச்சிகள் தான் தீர்மானித்துள்ளன. அவை ஒவ்வொன்றும் நிதர்சனத்திலிருந்து விலகி ஓடியவை. ஒரு மூடனின் கற்பனை உலகமன்றி வேறல்ல இது."

"பொய்யையா? பொய்யை சொல்லால் சாஸ்வதப்படுத்தவா இத்தனை தவம்.?"

"...இதில் ஞானத் தேடலுடையவனுக்கு என்ன உள்ளது? ஒன்றுமில்லை. ஞானத்திற்கான தத்தளிப்புகள், தருக்கங்கள், பிறகு ஒரு கனவு அவ்வளவுதான்"

"..எது மெய்மையோ அதுவல்ல இது. இது சொற்களின் ஆரவாரத்திற்குள் ஓர் ஆத்மா பதுங்கியிருக்கும் விளையாட்டுத் தான்."

இவ்விதமாக சங்கர்ஷணனிற்கும் பத்மாட்சிக்குமிடையிலுள்ள உரையாடல் செல்கிறது. சங்கர்ஷனின் மேற்படி அவனது காவியத்ப்ை பற்றிய விளக்கத்தின் அடிப்படையில் விஷ்ணுபுரம் நாவலினைப் புரிந்து கொள்வதிலொரு சுவையுண்டு. நாவலை முழுவதும் படிக்காமல் அதில் தொக்கி நிற்கும் பல காரணங்களைக் கண்டு கொள்ள முனைவோர் சங்கர்ஷணனின் மேற்படி கூற்றினூடு புரிந்து கொள்ள முனைவதும் ஓரளவுக்குப் பொருத்தமானதே. இவ்வளவு தூரம் சிந்திக்கின்ற ஜெயமோகன் 'தொக்கி நிற்கும் காரணங்கள் நிறைய இருந்தால் அவற்றைச் சிறிய அளவிலாவது பத்மாட்சியின் வாயிலாக எடுத்துக் கூறி சங்கர்ஷணனின் துயரைச் சிறிதளவாவது குறைத்திருக்க மாட்டாரா? ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இருப்பு பற்றிய ஞானத்தேடல் தானென்று அவரே பல இடங்களி குறிப்பிட்டுள்ள போது அந்த ஞானத் தேடலுடன் ஒப்பிடும் பொழுது வெகு சாதாரணமான விடயங்களைப் பெரிது படுத்தி 'இல்லை இந்த அற்ப விசயங்களைத் தான் இந்நாவல் கூறுகிறது' எனச் சிலர் வலிந்து பொருள் கூற முனைவதை என்னவென்பது. அது மூன்றாண்டுகளாக அலைந்து திரிந்த ஜெயமோகனின் தேடலினைக்கொச்சைப் படுத்துவதாகும். மேலும் இந்நாவலின் 357 ஆவது பக்கத்தில் சங்கர்ஷ்ணன் வாயிலாக இக்காவியத்தின் அமைப்பு பற்றி விரிவாகவே விளக்கம் தரப் பட்டிருக்கிறது.

"...யுகங்கள் திவலைகளாகச் சென்று ஒடுங்கும் அவன் மேனியென்னும் கடலன்றி வேறு எதுவுமில்லை. அந்த உடலையே என் காவியமாக எடுத்துக் கொண்டேன். ஸ்ரீபாதம், மணீமுடி, கெªஸ்துபம் என்று என் காவியத்தை மூன்றாகப் பிரித்தேன்... பாதமே சரணாகதி. ஞானமே கெªஸ்துபம். மணிமுடியே விஷ்வரூபம்..."

அதன் பிறகு சங்கர்ஷணன் பெªத்த தத்துவ நூல்களையெல்லாம் கரைத்துக் குடிக்கின்றார்.
"...பெருமாளின் உடலை ஞானத்தால் அள்ள முயல்வது என்று முடிவு செய்தேன். ஷட்தர்சங்களையும், தர்ம சாத்திரங்களையும், கற்ற கர்வம் தூண்டியது. மகா அஜிதரின் விஜயம் சம்பந்தமாக அமைந்தது கெªஸ்துப காண்டம். பின்பு காதலை அறிந்து மனம் நெகிழ்ந்து, குழந்தைகளை வளர்த்து மனம் விரிந்து, நான் வேறு ஒரு மனிதனாக ஆன பிறகு அந்தக் கெªஸ்துப காண்டம் வரண்ட தத்துவ விசாரங்களினாலானதாகப் பட்டது. என் சொந்த ஊர் திரும்பி, என் மண்ணில் அமர்ந்து ஸ்ரீபாத காண்டத்தை எழுதினேன்..."

"மணிமுடி காண்டம் எழுதியது வெகு காலம் கழித்து என்கிறீர்களா?"

"ஆம் வெகு காலம் கழித்துக் காவியம் முழுமை பெறமுடியவில்லை என்ற உணர்வு என்னை அலைக்கழித்தபடியே இருந்தது. முடிவுறாத காவியத்துடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வடதிசைப் பயணம் மேற்கொண்டேன்.... பெருமாளின் விஸ்வரூபம் பற்றிய காட்சியினை அப்போது எழுதினேன்..... உண்மையச் சொல். காவியம் எப்படி இருக்கிறது"...

இனியாவது விஷ்ணுபுரத்தை ஆராய விளைபவர்கள், அதில் 'தொக்கி நிற்கும் பொருள்' பற்றியெல்லாம் அறிவதில் காலத்தைத் தள்ளாமல் நேரத்தைப் பொன்னாகச் செல்வழிப்பார்களாக. நாவலை நாவலினூடு, அதில் வரும் பாத்திரங்களினூடு, அது கூறும் பொருளினூடு ஆராயும் ஆற்றலினை இனியாவது வளர்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய யானை பார்த்த குருடர் வாதங்கள் ஜெயமோகனிற்கு மட்டுமல்ல பத்மபுராணம் படைத்த மாகவி சங்கர்ஷணரிற்கும் இழுக்கினைத் தேடித் தந்து விடுமென்பது கிரிதரனின் தாழ்மையான அபிப்பிராயமாகும். மேலும் எனது இந்தக் கருத்துகளை விமர்சனமாகக் கொள்வீரோ அல்லது கருத்துகளாகக் கொள்வீரோ? அது உங்களதுபார்வையைப் பொறுத்தது. இங்கு இந்த விஷ்ணுபுரத்தில் எல்லாமே சார்பானவைதான். எனவே தவறில்லை. மொத்தத்தில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை சங்கர்ஷணன் வார்த்தைகளில் 'சொற்களின் ஆரவாரத்திற்குள் ஓர் ஆத்மா பதுங்கியிருக்கும் விளையாட்டுத் தான்' என்று நிச்சயமாகக் கூறலாம்.

நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.காம்
ngiri2704@rogers.com

அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்!

நவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட 'சார்பியற் தத்துவம்' (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள் பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சியல்ல. பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. இச் சார்பியற் தத்துவமும், சக்திச் சொட்டுப் பெளதிகமும் (Quantum Physics) இன்றைய நவீன பெளதிகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படுபவை. சார்பியற் தத்துவத்தைப் பொறுத்தவரையில் அது முழுக்க முழுக்க ஜன்ஸ்டைனின் கோட்பாடே. சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும் ஜன்ஸ்டைனையே கருதலாம். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு நோபல் பரிசு கிடைத்ததே போட்டான்கள் பற்றிய கண்டு பிடிப்பிற்காகத்தான். இக் கண்டுபிடிப்பே சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப வளர்ச்சியாகும். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு சார்பியற் தத்துவத்திற்காகவும் இன்னுமொருமுறை நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும்.

சரி. அப்படி இந்தச் சார்பியற் தத்துவம் அப்படி என்னதான் கூறிவிடுகின்றது?
விடை மிகவும் சுலபம். 'நேரம்', 'வெளி' பற்றிய கருதுகோள்களை , அதாவது இதுவரை காலம் 'வெளி', 'நேரம்' பற்றி நிலவி வந்த கோட்பாடுகளை, சார்பியற் தத்துவம் அடியோடு மாற்றியமைத்து விடுகின்றது. அதே சமயம் 'பொருள்' , 'சக்தி', 'புவியீர்ப்பு', பற்றியும் புதிய கருது கோள்களை முன்வைக்கின்றது. இச் சார்பியற் தத்துவக் கோட்பாடுகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. சிறப்புச் சார்பியற் தத்துவம் (Special Theory of Relativity)

2. பொதுச் சார்பியற் தத்துவம் (General Theory of Relativity)

இவற்றில் 'சிறப்புச் சார்பியற்' தத்துவம் இதுவரை நிலவி வந்த 'வெளி' 'நேரம்' பற்றிய கோட்பாடுகளை அடியோடு மாற்றியமைத்து விடுகின்றதென்றால், பொதுச் சார்பியற் தத்துவமோ புவியீர்ப்பு பற்றிய கோட்பாட்டை மாற்றியமைத்து விடுகின்றது.

'வெளி' 'நேரம்' பற்றிய கோட்பாடுகள்:
ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலவி வந்த அரிஸ்டாட்டிலின் கோட்பாடுகளைப் பரிசீலனைக்குட்படுத்தியவர்கள் கலிலியோவும் , சேர். ஜசக் நியூட்டனுமே. ஆனால் வெளி, நேரம் பற்றிய இவர்கள் யாவரினதும் கோட்பாடுகள் ஒன்றாகவேயிருந்தன. வெளியையும், நேரத்தையும் சுற்றிவர நிகழும் இயக்கங்களால் எவ்விதப் பாதிப்பும் அடையாத சுயாதீனமானவைகளாகவே (absolute) இவர்கள் கருதினார்கள். சாதாரண மனித வாழ்வின் அனுபவங்களிலிருந்தே இவர்களும் வெளி, நேரம் பற்றிய கோட்பாடுகளை வகுத்திருந்தார்கள்.
எங்கும் எல்லையற்று விரிந்து பரந்து கிடப்பதுதான் வெளி. 'எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளி வானிலே..' என்று பாரதி பாடியதைப் போல் எங்கும் வியாபித்துக் கிடக்கின்றது வெளி. இந்த வெளியில் தான் சூரியன், கிரகங்கள் மற்றும் பல்வேறுபட்ட பொருட்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய இயக்கங்கள் இந்த வெளியைப் பாதிப்பதில்லை. அது தன்பாட்டில் வியாபித்துக் கிடக்கின்றது. இவ்வாறுதான் நியூட்டன் வரையிலான் விஞ்ஞானிகள் கருதினார்கள். இது போன்றுதான் 'நேரமும்' சுற்றிவர நிகழும் இயக்கங்களால் எவ்விதப் பாதிப்புமற்று தன்பாட்டில் இயங்கிக் கொண்டிருப்பதாகப் பெள்தீக விஞ்ஞானிகள் கருதினார்கள்.

சிறப்புச் சார்பியற் தத்துவமும், வெளியும், நேரமும்...
இவ்விதம் சுயாதீனமாகக் கருத்தப்பட்டு வந்த 'வெளி'யோ 'நேர'மோ உண்மையில் சுயாதீனமானவையல்ல. அவையும் சுற்றி வர நிகழும் இயக்கங்களால் பாதிப்புறுபவையே, சார்பானவையே என்பதை ஜன்ஸ்டைன் 'சிறப்புச் சார்பியற் தத்துவம்' மூலம் வெளிக்காட்டினார். உதாரணமாக நேரத்தை எடுத்துக் கொண்டால்.. வேகமானது நேரத்துடன் மாறுதல் அடைகின்றது. ஒளி வேகத்தில் செல்லும் ராக்கட்டில் ஒரு மனிதனையும், பூமியில் நிற்கும் ஒருவனையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இவர்கள் இருவருமே 'சீக்கோ' கடிகாரங்களைக் கைகளிலே கட்டியிருக்கின்றார்கள். இவர்கள் ­ருவரது கடிகாரங்களும் நேரம் சுயாதீனமானதாகவிருந்தால் ஒரே நேரத்தைக் காட்ட வேண்டும். ஆனால் நேரம் சார்பானதாகவிருப்பதால் , இருவரது கடிகாரங்களும் இரு வேறு நேரங்களையுமே காட்டும். உண்மையில் வேகம் கூடக்கூட நேரம் மாறுவதும் குறையவே தொடங்கும். ஒளிவேகத்தில் செல்லும் ராக்கட்டில் இருப்பவனிற்கு அவனிற்குச் சார்பாக ஒரு மணித்தியாலம் சென்றிருக்கும். அதே சமயம் பூமியிலிருப்பவனிற்கோ பல நூறு வருடங்கள் சென்றிருக்கும். இவ்விதம் நேரமானது வேகத்துடன் மாறுவது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மை.

இதற்காக விஞ்ஞானிகள் இரும்பு அணுக்கருக்களுடன் காமாக் கதிர்களை இரு வேறு உயரங்களில் மோதவிட்டுப் பார்த்தார்கள். உயரத்தில் நேரம் வேகமாகச் செயற்படுகின்ற காரணத்தால் காமாக் கதிர்களை உறுஞ்சும் இரும்பு அணுக்கருக்களின் போக்கு வித்தியாசப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

வெளியும், பொருளும்..
இதுபோல் தான் சுயாதீனமாகக் கருதப்பட்டு வந்த வெளி (space) கூட நேரம் போல் பாதிப்படைகின்றது. ஒரு பொருளை எடுத்துக் கொண்டால் , அதன் பொருண்மை கூடக் கூட அப்பொருளானது தன்னைச் சுற்றியிருக்கும் வெளியை வளைக்கத் தொடங்கிவிடுகின்றது. 'வெளியை'யாவது வளைப்பதாவது.. வளைப்பதற்கு வெளியென்ன ஒரு பொருளா?.." என நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான். ஆனால் இவ்விதம் வெளியைப் பொருளின் பொருண்மை வளைப்பது நிரூபிக்கப் பட்ட உண்மை.

புதன் கிரகமானது சூரியனைச் சுற்றி வரும் ஒழுக்கில் ஒரு சிறு வித்தியாசம் இருந்து வந்தது. இந்த வித்தியாசத்தின் காரணத்தை நியூட்டனின்கோட்பாடுகளினால் விளக்க முடியவில்லை. ஜன்ஸ்டைனின் சார்பியற் கணித சூத்திரங்களோ இவ்வித ஒழுக்கில் காணப்படும் மாற்றத்திற்குக் காரணம் சூரியன் அதனைச் சுற்றியுள்ள வெளியினை வளைத்து விடுவதே என்பதை எடுத்துக் காட்டின. இது பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த வானியல் அறிஞரான சேர். ஆர்தர் எடிங்டனால் சூரிய கிரகணமொன்றை அவதானித்த பொழுது நிரூபிக்கப் பட்டது.
பொதுச் சார்பியற் தத்துவமும் புவியீர்ப்பும்...

புவியீர்ப்பைப் பொறுத்தவரையில் நியூட்டன் அதனை ஒரு விசையாகவே கருதினார். ஆனால் ஜன்ஸ்டனின் 'பொதுச் சார்பியற் தத்துவமோ' சூரியன் தன்னைச் சுற்றியுள்ள வெளியினை வளைத்து விடுகின்றதன் காரணமே பூமியினைச் சூரியனைச் சுற்ற வைத்து விடுகின்றதென்பதை எடுத்துக் காட்டியது. இவ்விதமாக அரிஸ்ட்டாடிலின் கோட்பாடுகளையே
ஆட்டங் காண வைத்த நியூட்டனின் கோட்பாடுகளையே ஆட்டங் காணவைத்து விட்டன ஜன்ஸ்டனின் சார்பியற் கோட்பாடுகள். சாதாரண மனித அனுபவங்களிற்கப்பாற்பட்டு சம்பவங்கள் நடைபெறும் போதே ஜன்ஸ்டனின் சார்பியற் கோட்பாடுகளைப் பூரணமாக உணர முடியும். மிகப் பிரமாண்டமான வேகத்தில் செல்லும் போதே நேரம் மாறுவதை இலகுவாக அவதானிக்க முடியும். அதனை , அம்மாற்றத்தினை. சாதாரண மனித சக்திக்குட்பட்ட வேகத்தில் அவதானிக்க முடியாது. ஏனென்றால்.. மாற்றம் அவ்வளவு சிறியதாக இருந்து விடுகின்றது.

மேலும் வெளியையும் நேரத்தையும் தனித் தனியாகப் பிரித்துப் பார்ப்பதையும் சார்பியற் கோட்பாடுகள் எதிர்க்கின்றன. 'வெளிநேரச்' (spacetime) சம்பவங்களின் தொகுப்பாகவே உண்மையில் , ஜன்ஸ்டனின் சார்பியற் கோட்பாடுகள் விளக்குகின்றன.

இவ்விதமாக இப்பிரபஞ்சத்தை உண்மையில் தெளிவாகத் துல்லியமாகச் , சரியாக மேற்படி ஜன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள் விளக்கி வைக்கின்றன.

உசாத்துணை நூல்கள்:
1. 'A Brief History Of Time' By Stephen Hawkings
2. 'Black Holes and Baby Universes' By Stephen Hawkings
3. 'Relatively Speaking' By Eric Chaisson
4. 'Relativity' By Albert Einstein
5. 'Stephen Hawking : quest for a theory of every thing' By Kitty Fergusson

-நன்றி: கணையாழி February 1997


சிறுகதை! ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை!

ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித 'டென்ஷ'னுமின்றிப் பின்னால் 'ஹோர்ன்' அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'ஹோர்ன்' அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. 'நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை' இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 'நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்' என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.

'ஓல்ட்வெஸ்டன்' றோட்டைக் கடந்து 'கீல் இண்டர்செக்ஷ'னையும் கடந்து கார் விரைந்தது. இடப்புறத்தில் 'கனடாபக்கர்ஸி'ன் 'ஸ்லோட்டர்' ஹவுஸ்' பெரியதொரு இடத்தைப் பிடித்துப் ப்டர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.
பொன்னையா இயற்கையிலேயே சிறிது கருணை வாய்ந்தவன். ஏனைய உயிர்களின்மேல் அன்பு வைக்க நினைப்பவன். ஊரிலை இருக்கும் மட்டும் சுத்த சைவம்தான். இங்கு வந்ததும் கொஞ்சங்கொஞ்சமாக மாறி விட்டான். 'இங்கத்தைய கிளைமட்டிற்கு இதையும் சாப்பிடாட்டி மனுஷன் செத்துத் துலைக்க வேண்டியதுதான்'. திடீரென் ஊர்ந்து கொண்டிருந்த 'டிரபிக்' தடைப்பட்டது. பொன்னையா மணியைப் பார்த்தான். நேரம் பதினொன்றையும் தாண்டி விட்டிருந்தது. பஞ்சாப்காரன் பத்து மணிக்கே வரச்சொல்லியிருந்தான்.
பொன்னையாவிற்குத் தெரிந்த ஓரளவு நாணயமான கராஜ் அந்தப் பஞ்சாப்காரனின் கராஜ்தான். ஸ்டியரிங்கில் மெல்லியதொரு உதறல் நேற்றிலிருந்து. அதனைக் காட்டத்தான் பொன்னையா விரைந்து கொண்டிருந்தான். 'நேரங் கெட்ட நேரத்திலை இதென்ன டிரபிக் புளக்..' இவ்விதம் எண்ணியபடி டிரபிக் தடைப்பட்டதற்குக் காரணம் என்னவாகயிருக்குமென் எதிரே நோக்கினான்.
இதற்குள் றோட்டுக் கரையில் சனங்கள் விடுப்பு விண்ணானம் பார்க்கக் கூடத்தொடங்கிட்டுதுகள். இந்த விஷயத்தில் எல்லா மனுஷருமே ஒன்றுதான். எதிரே அவன் பார்வையை மறைத்தபடி கனடா பக்கர்ஸிற்குச் சொந்தமான பெரிய 'ட்றக்'கொன்று நின்றதால் இவனால் ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை.

றோட்டுக் கரையில் விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த சைனாக்காரனொருவனைப் பார்த்து ''ஏ..மேன் ..வட்ஸ் த மாட்டார்? வட்ஸ் கோயிங் ஓன்..." பலமாகக் கத்தினான்.

அதற்கு அந்தச் சைனாக்காரன் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ''பீவ்..எஸ்கேப்..ஸ்லோட்டர்.." என்றான்.

அருகிலிருந்த வெள்ளையனொருவன் சைனாக்காரனின் ஆங்கிலத்தைக் கேட்டுச் சிரித்தான். இவனுக்கும் சிரிப்பாகவிருந்தது. ஆனால் அந்த ஆங்கிலம் கூட விளங்கியது. மாடொன்று ஸ்லோட்டர் ஹவுஸ்ஸிலிருந்து தப்பி வந்து விட்டது என்பதைத்தான் அந்த சைனாக்காரன் அவ்விதம் கூறினான் என்பதும் விளங்கியது.

மரணத்திலிருந்து தப்பிவந்த அந்த இனந்தெரியாத மாட்டின் மேல் ஒருவித பரிதாபம் தோன்றியது. அநுதாபம் படர்ந்தது. காரை வெட்டி றோட்டுக்கரையோரம் நிறுத்தி விட்டு பொன்னையா காரை விட்டிறங்கி வேடிக்கை பார்க்கும் சனங்களில் ஒன்றானான். 'ஸ்ட்ரீட் கார்' செல்லும் இருப்புப் பாதையின் மேல் , சுற்றிவர வேடிக்கை பார்த்தபடி நிற்பவர்களைப்பார்த்து முறைத்தபடி அந்த மாடு நின்றது. அதன் கண்களில் மரண பயம் கவ்விக் கிடந்ததை இவன் உணர்ந்தான். அதைப் பார்க்கப் பாவமாயிருந்தது. பொன்னையாவிற்குக் கவலை தோன்றியது.
உருண்டு திரண்டு கொழுகொழுவென்று வாட்ட சாட்டமாக வளர்ந்திருந்தது. அருகில் சென்று பிடிக்க முனைந்த கனடா பக்கர்ஸ் ஊழியர்களைப் பார்த்து முறைத்தது. முட்டுவது போல் பாசங்கு செய்து முரண்டு பிடித்தது. அருகில் ஒருவரையும் வரவிடாமல் தடுத்து வைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருந்தது.

எவ்வளவு நேரத்திற்குத்தான் அதனால், அந்த ஐந்தறிவு உயிரினால், தாக்குப் பிடிக்க முடியும்? 'மட மாடே! மனிதனுடன் போட்டி போட்டு உன்னால் வெல்ல முடியுமா என்ன?'

திடீரென பொன்னையாவிற்குச் சிந்தையில் ஒரு எண்ணம் எழுந்தது.
'இந்த மாட்டின் மனநிலை என்னவாயிருக்கும்?' அருகிலுள்ள ஸ்லோட்டர் ஹவுஸிற்குள் வெட்டுப் படுவதற்காகக் காத்து நிற்கும் ஏனைய மாடுகளின் ஞாபகமும் எழுந்தது. 'இவ்விதம் தப்பிவர இந்த மாடு எவ்வளவு கஷ்ட்டப் பட்டிருக்கும்?'

'கிடைத்த சுதந்திரத்தின் நிரந்தரமற்ற தன்மையைப் பாவம் இந்த மாட்டால் உணரமுடியவில்லை..அதனால்தான் தன்னுயிரைக் காத்துக்கொள்ள கிடைத்த அற்ப சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த மாடு வீராவேசத்துடன் முயல்கிறது..'
ஊரில் இருப்பவர்களின் நினைவுகளும் எழாமலில்லை...'இந்த மாட்டைப் போன்ற நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்?..அரைகுறையாகத் தப்பி மீண்டும் அகப்பட்டவர்கள்..தப்புவதற்கு முடியாமல் சமாதியாகிப் போனவர்கள்...'

மீண்டும் கவனம் மாட்டின் மேல் திரும்புகின்றது. இன்னமும் அது மூர்க்கத்துடன் தன்னை நெருங்குபவர்களை எதிர்த்து நிற்கின்றது. யாரும் நெருங்காத சமயங்களில் ஒருவித சோகம் கலந்த பாவத்துடன் அமைதியாக ஒருவித பயத்துடன் நிற்கிறது.

அதன் கண்களிருந்து மெல்ல மெல்ல இலேசாகக் கண்ணீர் வடிகிறது..எதை நினைத்து அழுகிறது? தன் பரிதாபகரமான நிலையை நினைத்தா?தன்னை சமாதியாக்குவதற்குக் கங்கணம் கட்டி நிற்கும் மனிதர்களால் தனக்கேற்பட்ட நிராதரவான நிலையை உணர்ந்தா? ஏன் அது அழுகிறது?

திடீரெனப் பொன்னையாவிற்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. 'ஏன் இந்த மாட்டிற்குரிய விலையைக் குடுத்து, இதன் உயிரைக் காப்பாற்றினாலென்ன? ஊரிலையென்றாலும் வீட்டு வளவிலை போய்க் கட்டி வைக்கலாம்...இங்கு எங்கு போய்க் கட்டி வைப்பது..? அப்பார்ட்மென்றிலையா..?அப்படித்தான் காப்பாற்றினாலும் இந்த ஒரு மாட்டைக் காப்பாற்றுவதால் மட்டும் இதன் நிலையில் இருக்கின்ற ஏனைய மாடுகளின் பிரச்சினை தீர்ந்து விடுமா..?'
இதற்கிடையில் யாரோ மாடு டிரபிக்கிற்குத் தடையாயிருப்பதை பொலிஸிற்கு அறிவித்து விட்டார்கள் போலும்.. 'எமர்ஜன்ஸி பிளாஸிங் லைட்'டுடன் 'சைரன்' முழங்க பொலிஸ் காரொன்று விரைந்து வந்து இறங்கியது. இரு பொலிசார் இறங்கினார்கள். கயிரொன்றில் வளையம் செய்து சிறிது நேரம் முயற்சி செய்தார்கள். பலனில்லை. மாடு மிகவும் உறுதியாகவே எதிர்த்து நின்றது. இதற்கிடையில் விஷயத்தை மோப்பம் பிடித்துப் பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சிக்காரர்களென்று கமராக்களுடன் கூடி விட்டனர்.

மாடு தன்னுயிரைக் காப்பதற்கானதொரு போராட்டத்தில், ஜீவமரணப் போராட்டத்திலீடுபட்டிருக்கின்றது. இதை அடக்க, வேடிக்கை பார்க்க, படம் பிடிக்க ஒரு கூட்டம். ஒன்றிற்கும் செயல் பட முடியாத , இயலாத கூட்டம். தானும் அக்கூட்டத்தில் ஒருவன் என்பதை நினைக்கையில் பொன்னையாவிற்குத் தன்மேல் ஒருவித வெறுப்புக்கூடத் தோன்றியது.
தங்கள் முயற்சி சிறிது தோல்வியுற்றதைக்கண்ட பொலிஸார் தங்களிற்கு கூடிக் கதைத்தார்கள். இதற்குள் வீதியில் இரு திசைகளிலும் வாகனங்கள் பெருமளவில் முடங்கத் தொடங்கிவிட்டன.

தொலைவிலிருந்தவர்கள் போக்குவரத்து தடைப்பட்டதன் காரணத்தை அறியாத நிலையில் ஹோர்னகளை மாறிமாறி அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். நிலைமை கட்டுமீறுவதைப் பொலிஸார் உணர்ந்தார்கள்.

இறுதியில் மாட்டுப் பிரச்சினை ஒரு முடிவிற்கு வந்தது.
ஆறறிவுப் பிராணியின் முன்னால் சுதந்திர வேட்கை நசுக்கப் பட்ட நிலையில் 'ட்ரான்குலைசரா'ல் மயக்கப்பட்டு சாய்ந்த மாட்டைத் தூக்கிய கனடாப் பக்கர்ஸ் ஊழியர்கள் அதனை 'ஸ்லோட்டர் ஹவுஸி'ற்குள் கொண்டு சென்றார்கள்.

ஒருவழியாகப் போக்குவரத்துச் சீர்பட்டது. சனங்கள் ஒவ்வொருவராகக் கலையத் தொடங்கினார்கள்.

பஞ்சாப்காரன் திட்டப் போகின்றானென்ற நினைப்புடன் தன்காரில் பாய்ந்தேறினான் பொன்னையா. கூடவே அடிக்கடி மிருகங்களை வதைப்பதாகக்கூறி வழக்குப் போடும் 'ஹியுமேன் சொசைடி'யின் ஞாபகமும் வந்தது. சிரிப்பு வந்தது.

சிறிது போராடித் தோல்வியுற்ற மாட்டின் நிலைமை அநுதாபத்தை தந்தாலும் அதன் சுதந்திர வேட்கையும் அதற்காக அது போராடிய தீவிரமும் அதன் மேல் ஒருவித பக்தியை, பெருமிதத்தை ஏற்படுத்தியது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்! அன்றிலிருந்து பொன்னையா மீண்டும் முழுச் சைவமாகிவிட்டான்.

[இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் ­இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'பனையும் பனியும்' சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.]

நூல் அறிமுகம்! Jerzey kosinskiயின் Being There!

அண்மையில் Jerzy kosinski எழுதிய Being There என்ற கைக்கடக்கமான சிறியதொரு நாவலைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. கடுகு சிறிது காரம் பெரிது என்பதற்கொப்ப அளவில் சிறியதானாலும் இந்நாவல் உள்ளடக்கத்தில் கனதியானது. மனிதனைப் பாதிக்கும் நிலைமைகளை ஒருவித கிண்டல் பாணியில் நோக்கி விமர்சிக்கும் வகையிலமைந்த நாவலை 'சட்டயர்' (Satire) என்போம். Being There அந்த வகையான நாவல்களில் குறிப்பிடத்தக்கதொன்று. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் இச்சிறுநாவல் இன்றைய மனிதனைப் பலமாகப் பாதிக்கும் உலக, உள்நாட்டு அரசியல் மற்றும் குறிப்பாகத் தொலைகாட்சி பற்றிப் பலமாகவே விமர்சனத்தை முன்வைக்கின்றது. உருவத்தைப் பொறுத்த வரையில் கிறிஸ்த்தவ தத்துவ சமயநூலான பைபிளினது பாதிப்பு மிக அதிகமாகவே தெரிகின்றது.

கதை இதுதான்: 'தற்செயல்' (Chance) என்ற தோட்டக்காரனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை விவரிப்பதுதான் நாவலின் பிரதானமான பணி. இவனுக்குச் 'சான்ஸ்; என்ற பெயர் வந்ததற்குக் காரணமே பூமியில் இவனது பிறப்பு தற்செயலானது என்பதுதான். இவன் ஒரு முட்டாள். இவனால் எழுதப் படிக்க முடியாது. பொதுவாகத் தன்னுணர்வு, சுய பிரக்ஞை என்பதேயற்றவன். இவன் ஒரு செல்வந்தனின் வீட்டுத் தோட்டகாரனாகப் பல வருடங்களாகப் பணி புரிந்து வருகின்றான். இவனது ஒரே வேலை அச்செல்வந்தனது தோட்டத்தைப் பராமரிப்பதுதான். மிகுதி நேரத்தில் தனக்கென்று ஒதுக்கிய பகுதியில் இருந்தபடி டெலிவிஷனைப் பார்ப்பதுதான். பல வருடங்களாக இவன் அச்செல்வந்தனது வீட்டில் வேலை பார்த்து வந்தபோதும் இவனிற்கென்று இவன் இருந்ததற்கான அத்தாட்சிப் பத்திரங்களோ , ஆளடையாளப் பத்திரங்களோ எதுவுமே இவனிடமில்லை. இவனது இருப்பிற்கான (Being) எதுவித தடயங்களுமே இவனைத் தவிர இவ்வுலகில்லை. திடீரென இவனது முதலாளியான அச்செல்வந்தன் இறந்து விடவே இவனுக்குப் பிரச்சனை உருவாகின்றது. இவன் அவ்வீட்டில் நீண்டகாலம் இருந்ததற்கான எதுவிதத் தடயங்களுமே இல்லாத நிலையில் செல்வந்தனது சட்டத்தரணிகளால் வீட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றான். முதன் முதலாக இவன் அந்தத் தோட்டத்தைவிட்டு ஏனைய மனிதர்கள் வாழும் வெளியுலகுக்கு வருகின்றான். செல்வந்தனால் இவனுக்கு அளிக்கப்பட்ட உயர்ரக ஆடைகள் அணிந்தபடி பார்வைக்கு உயர்குடிக் கனவான் போன்ற தோற்றத்துடன் வெளியுலகில் காலடி எடுத்து வைக்கும் இவனை அமெரிக்க அரசியல் வர்த்தக மட்டத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கும் சுகவீனமுற்றுப் படுக்கையிலிருக்கும் பிரமுகர் ஒருவரின் மனைவியான 'எலிஸபெத் ஈவ்' (Elizabeth Eve) என்பவள் மோதி விடுகின்றாள். அதற்குப் பிராயச்சித்தமாக இவனை அப்பெண்மணி தனது மாளிகைக்குக் கொண்டு சென்று தனது குடும்ப வைத்தியரின் உதவியுடன் பராமரிக்கின்றாள். இவனது உடையலங்காரத்தைப் பார்த்து இவனை ஓர் உயர்குடிக் கனவானாக எண்ணி விடும் அப்பெண்மணி இவனது பெயரைக் கேட்கும் பொழுது அதற்கு இவன் தனது பெயர் 'சான்ஸ் கார்டினர்' ( சான்ஸ் தோட்டக்காரன்)" எனப் பதிலிறுக்கின்றான். அதனை அப்பெண்மணி Chauncy Gardiner என் விளங்கிக் கொள்கின்றாள். இவ்விதமாகச் Chauncy Gardiner ஆக உருமாறிவிட்ட Chance Gardener அப்பெண்மனியின் உதவியால் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றான். ஒருமுறை தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்வொன்றில் அமெரிக்க ஜனாதிபதி நாட்டுப் பொருளாதார நிலைமைகளைப் பற்றிக் கேட்ட கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கையில் தோட்டம் தவிர வேறெந்த அறிவுமற்ற முட்டாளான சான்ஸ் தனது தோட்டத்தை எண்ணிக் கொண்டு பதிலிறுக்கின்றான். 'பருவங்கள் மாறிவரும்' என்கின்றான். இதனைப் பொருளாதார நிலைமை மாறும் எனக் கூறுவதாக எண்ணிக் கொண்ட ஜனாதிபதி மகிழ்சியடைகின்றார். இவ்விதமாக Chanuncey Gardinerஐ அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக தொலைக்காட்சி உருமாற்றி விடுகிறது. இவ்விதம் முக்கிய புள்ளியாக உருமாறி விட்ட 'சான்ஸி கார்டின'ரின் நட்பைப் பெற ருஷ்ய தூதரக அதிகாரி முயல்கின்றார். 'சான்ஸி கார்டின'ரின் இருப்பினை உறுதிப்படுத்தும் எந்தவிதப் பத்திரங்களையும் பெற முடியாத தனது உளவுப்படையினர் மேல் சீற்றமுறும் அமெரிக்க ஜனாதிபதி 'சான்ஸி கார்டினர்' சோவியத் உளவாளியாகயிருக்கக் கூடுமோவென ஐயுறுகின்றார். அதே சமயம் 'Chance'ஐப் பல்கலைக்கழகமொன்றின் துணை வேந்தராக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இச்சிறு நாவலிம் பிரதானமான நிகழ்வுகள் இவைதான்.

முதன் முதலில் இச்சிறு நாவலின் உருவமைப்பைச் சமயம் எவ்விதம் பாதித்துள்ளதென்பதைப் பார்ப்போம். விவிலிய நூல் கூறும் படைப்புத் தத்துவத்தின்படி 'படைப்பு' ஏழு நாட்களில் நடைபெறுகின்றது. இந்நாவலும் ஏழு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிறித்தவ சமயத் தத்துவப்படி 'ஈடன் பூங்கா'வில் படைக்கப்பட்ட ஆதாமும் , ஏவாள் இருவருக்கும் ஆரம்பத்தில் மரணமற்ற வாழ்க்கைதானிருந்தது. அவர்களைப் படைத்த கர்த்தரின் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், பாம்பினால் தூண்டப்பட்ட ஏவாளின் வற்புறுத்தலின்பேரில் ஆதாமும் ஏவாளும் ஈடன் தோட்டத்திலிருக்கும் நன்மை தீமைகளை அறிவிக்கும் விருட்சத்தின் கனியைப் புசிக்கின்றார்கள். அவர்கள் வாழ்க்கையில் பாவ,புண்ணியம் புகுந்து கொள்கிறது. இச்சிறு நாவலில் வரும் பெண்மணிக்கும் பெயர் Eve, Elizabeth. ஈடன் பூங்காவைப் போல் இந்நாவலிலும் ஒரு பூங்கா வருகின்றது. இந்நாவலின் உருவத்தில் சமயத்தின் பங்களிப்பை இவை கூறி நிற்கின்றன.
முழு முட்டாளான Chanceஐ வெற்றிகரமான டி.வி. பேர்சனால்டியாக' தொலைக்காட்சி உருமாற்றி விடுகின்றது. தொலைக்கட்சியில் காட்டப்படும் இவனது உருவத்தைப் பற்றி ஒரு பெண்மணி பின்வருமாறு எண்ணுகின்றாள்:
Manly; Well-Groomed;
Beautiful voice;
Sort of a Gary Grant.
He is not one of these phony idealists.."( பக்கம் 58).


உண்மையில் இவன் ஒரு வடிகட்டின முட்டாள். இதுதான் தொலைக்காட்சியினால் சமுதாயத்தில் ஏற்படுகின்ற பெரிய பாதிப்பு. பொய்யான பிம்பங்களைத் தொலைக்காட்சி உண்மையைப் போல் காட்டி விடுகின்றது. உண்மையாகவே வெளிப்புற உருவை மட்டும் தான் தொலைக்காட்சி வெளிப்படுத்துகிறது. ஆழத்தே புதைந்து கிடக்கும் உண்மையை அது வெளிப்படுத்துவதேயில்லை. உண்மையில் யதார்த்தத்தைத் திரித்துக் காட்டுவதன் மூலம் போலியான வெளிப்பாட்டையே தொலைக்காட்சி உருவாக்குகின்றது. அது மட்டுமல்ல. தொலைக்காட்சி எந்த நிகழ்வையுமே ஒரு பொழுதுபோக்கு என்ற நிலைமைக்குச் சுருக்கி விடுகின்றது. அண்மையில் நடைபெற்ற வளைகுடா யுத்தத்தில் நேசநாடுகள் குண்டுகள் பொழிவதை ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல பார்த்தோமே தவிர, அதன் பின்னாளிருக்கும் மனித அழிவுகளையோ, வேதனையையோ உணர முடியவில்லையே. உண்மையில் இந்நாவல் அமெரிக்க ஜனாதிபதியாக ரீகன் தெரிவாவதற்கு முன்னால்தான் எழுதப்பட்டது. இந்நாவலில் வரும் முட்டாள் தோட்டக்காரனை அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக எவ்விதம் தொலைக்காட்சி மாற்றி விடுகின்றதோ அந்த நிலைமைதான் ரொனால்ட் ரீகனுக்கும் ஏற்பட்டது என்று சில இலக்கிய விமர்சகர்கள் ஒப்பிடாமலுமில்லை.

அமெரிக்க ஜனாதிபதி, சோவியத் தூதுவர் ஆகிய பாத்திரங்களினூடு அணுவாயுதப் போட்டி பற்றியும், விரயமாகும் பணம் பற்றியும் விமர்சனத்தை முன் வைத்தாலும் இந்நாவலின் பிரதானமான நோக்கம் தொலைக்காட்சியினால் உருத்திரிக்கபப்ட்ட உண்மைகளை உண்மைகளாக ஏற்றுக் கொள்ளூம் சமுதாயமொன்றில் உருவாகக் கூடிய ஆபத்துக்களை எச்சரிக்கை செய்வதே. இத்தகைய முட்டாள்களின் கைகளில் அதிகாரம் அகப்பட்டு விடுவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் முழுமனித இனத்தையே பாதித்து விடும் என்பதைத்தான் மறைமுகமாக இச்சிறுநாவல் உணர்த்தி வைக்கின்றது. ஹெமிங்வேயின் 'கடலும் கிழவனும்', ஆல்பேர்ட் காம்யுவின் 'அந்நியன்' மற்றும் ஸ்டீன் பேக்கின் 'முத்து' போன்று அளவில் சிறியதானாலும் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் காத்திரமானதொரு நாவல்தான் Being There. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் நிச்சயம் படிக்க வேண்டியதொரு நாவல் என்று கூறினால் அது மிகையில்லை.

நன்றி: சுபமங்களா, மார்ச் 1995

ngiri2704@rogers.com

நூலறிமுகம்! 'மிஷியோ ஹகு'வின் 'ஹைபர் ஸ்பேஸ்'!

நாம் வாழும் இந்த உலகம், வான், மதி, சுடர், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நமது பிரபஞ்சம் இவை யாவுமே எப்பொழுதும் எந்நெஞ்சில் பெரும் பிரமிப்பினையும், பல்வேறு வகைப்பட்ட வினாக்களையும் ஏற்படுத்தி விடுவது வழக்கம். முப்பரிமாண உலகினுள் கைதிகளாக வளைய வந்துகொண்டிருக்கும் நாம், இம்மண்ணில் நாமே உருவாக்கிய அமைப்புகள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்குள் சிக்கி, அவற்றுக்கு ஈடுகொடுத்துத் தப்பிப் பிழைப்பதிலேயே எம் வாழ்நாளைக் கழித்து முடிந்து விடுகின்றோம். இத்தகையதொரு நிலையில் இப்பிரபஞ்சத்தின் தோற்றம், அமைப்பு, முடிவு பற்றிய வினாக்கள், அவை பற்றிய நினைவுகள், எண்ணங்கள் எல்லாமே எப்பொழுதுமே என் நெஞ்சில் ஒருவித தண்மையான உணர்வினை ஏற்படுத்தி விடுவது வழக்கம். சகல விதமான மன அழுத்தங்களிலிருந்தும் என்னை விடுபட இவை பெரிதும் உதவுகின்றன. இதற்காகவே நகரவாழ்வின், நாகரிக வாழ்வின் இறுக்கத்தினிலிருந்தும் விடுபடுவதற்காக நேரம் கிடைக்கும் போதிலெல்லாம் இரவினில் தொலைவினில் சிரிக்கும் நட்சத்திரக் கன்னியரின் கண்சிமிட்டலில், வெண்மதிப் பெண்ணின் பேரழகில் என்னை மறந்து விடுவேன். அவர்களுடன் கழிக்கும் என் பொழுதுகள் என்னைப் பொறுத்தவரையில் அற்புதமானவை. அவர்களைப் பற்றிய நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் இவை யாவுமே எனக்கு மிகவும் உவப்பானவை. அண்மையில் நம் இருப்பு, பிரபஞ்ச அமைப்பு பற்றியெல்லாம் புதியதொரு கோட்பாட்டளவில் விளக்குமொரு நல்லதொரு , வான் - இயற்பியல் (Astro-Physics) சம்பந்தமான நூலொன்றினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முன்பொருமுறை ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் 'சிறப்புச், சார்பியற்' கோட்பாடுகளை, அறிவுத்தாகமெடுத்த சாதாரண வாசகரொருவர் விளங்கும் வகையில் 'எரிக் சைய்சன்' (Eric Chaission) எழுதிய 'Relatively Speaking' வாசித்ததன் பின்னர், 'ஸ்டீபன் ஹார்கின்ஸ்'சின் 'காலத்தின் சுருக்கமான வரலாறு' (A Brief History Of Time) வாசித்ததன் பின்னர், என்னை மிகவும் கவர்ந்த நூலிது. நியுயோர்க்கில் 'City College'இல் தத்துவ இயற்பியலில் பேராசிரியராகப் பணிபுரியும் 'மிஷியொ ஹகு' (Michio kaku) எழுதிய 'ஹைபர் ஸ்பேஸ்' (Hyperspace) என்னும் நூல் பற்றித்தான் குறிப்பிடுகின்றேன். இந்தக் கட்டுரை இந்நூல் பற்றிய விமர்சனக் கட்டுரையோ அல்லது மதிப்புரையோ அல்ல. அவ்விதமானதொரு கட்டுரையினைப் பின்னொரு சமயம் எழுதும் எண்ணமுண்டு. ஆனால் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள சில விடயங்களைப் பற்றிய சிறியதொரு விபரிப்பே, ஏற்பட்ட என் எண்ணங்களின் பாதிப்பே எனது இச்சிறு கட்டுரை.


முப்பரிமாணங்களுக்குள் சிக்கியிருப்பதால் தான் எம்மால் இயற்கையில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் பூரணமாக விபரிக்க முடியாதிருக்கிறது. இதனால்தான் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனால் கூட இறுதிவரை இயற்கையின் நான்கு விதிகளையும் ஒன்றுபடுத்தி விபரிக்கும் வகையிலான கோட்பாடொன்றினைக் கண்டறியமுடியாது போய்விட்டது. இப்பிரபஞ்சத்தில் பல விடயங்கள் எம்மிருப்பில் சாத்தியமற்றவையாகத் தென்படுகின்றன. பல நிகழ்வுகளுக்கு எம்மால் சரியான காரணங்களைக் கண்டறிய முடியாதுள்ளது. அக்காரணங்களை விபரிக்க முடியாதுள்ளது. ஆனால் அத்தகைய விடயங்களைச் சாத்தியமாக்க, அத்தகைய நிகழ்வுகளை விபரிக்க, நாம் வேறு வகையில் சிந்திக்க வேண்டும். அணுக வேண்டும். அதனை ஏற்கனவே நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பலர் செய்யத்தொடங்கி விட்டார்கள். கணிதத்தில் புலமை வாய்ந்த அறிஞர்கள் அணுகத் தொடங்கி விட்டார்கள். இவை சம்பந்தமான கோட்பாடுகள் இன்னும் கோட்பாட்டளவிலேயே இருந்தாலும் எதிர்காலத்தில் அக்கோட்பாடுகள் நடைமுறைக்குச் சாத்தியமாவதற்குச் சாத்தியங்களிலாமலில்லை. உதாரணமாக ஒளி எப்பொழுதும் எம்மைப் பிரமிக்க வைத்துவிடுமொன்று. துகளாக, அலையாக விளங்குமிதன் இருப்பு புதிரானது. வெற்றிடத்தினூடாகப் பயணப்படக்கூடிய இதனியல்பு ஆச்சரியத்தைத் தருவது. ஒளியின் இவ்வியல்பினை நடைமுறையிலுள்ள கோட்பாடுகள் மூலம் விளக்க முடியாது. இது போல் விரிந்து கொண்டிருக்கும் நமது பிரபஞ்சத்தின் அளவு நம்மைப் பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்று விடுகிறது. ஒளி வேகத்தில் சென்றால் கூட, எத்தனையோ பில்லியன் ஆண்டுகள் தேவையுள்ள பயணங்களைக் கொண்ட தொலைவுள்ள இடங்களைக் கொண்டது நமது பிரபஞ்சம். இத்தகைய பிரமாண்டமான தொலைவுகளை நமது வாழ்நாளில் கடப்பதென்பது நினைத்துப் பார்க்க முடியாது. நமது சூரியமண்டலம் தனது அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்குமொன்று. ஒருநாளில் அழிந்து போய்விடும். விஞ்ஞானிகளின் ஆய்வுகளின்படி இன்னுமொரு ஐந்து பில்லியன் வருடங்களில் நமது சூரியன் 'வெண்குள்ளர்' (white dwarf) என்னும் நிலையினை அடைந்துவிடும். ஆனால் அதற்கு முன்னரே சூரிய மண்டலத்திலுள்ள கோள்களையெல்லாம் 'சிவப்பு அரக்கர்' (Red Giant) நிலையினை அடைந்த நமது சூரியன் விழுங்கி விடும். ஒருவேளை நமது கதிர் அழிவதற்கிடையில், எம்மால் வாழுதற்குரியதொரு கோளினையுள்ளடக்கிய இன்னுமொரு சூரியமண்டலத்தைக் கண்டுபிடிக்க முடிகின்றதென்று வைத்துக் கொள்வோம். ஆனால் அதே சமயம் விரிந்து கொண்டிருக்கும் நமது பிரபஞ்சம் ஒரு சமயம் விரியும் இயல்பினை மாற்றிச் சுருங்க ஆரம்பிக்கின்றதென்று வைத்துக் கொள்வோம். அவ்வாறானதொரு நிலையில் 'பெருவெடிப்பில்' (Big Bang) ஆரம்பித்த நமது பிரபஞ்சம் 'பெருஅழிவினில்' (Big Crunch) அழிந்து போகக் கூடியதொரு சாத்தியமும் ஏற்படலாம். அவ்வாறானதொரு நிலையில் நமது பிரபஞ்சத்திலுள்ள சகல உயிரினங்களும் அழிந்து போக வேண்டிய நிலையேற்படும். உண்மையில் அவ்வாறானதொரு நிலையில் உயிரினம் தப்புவதற்கேதாவது சாத்தியமுண்டா? ஒரு நிலையில் அதற்கான சாத்தியங்களும் இருக்கத்தான் செய்கின்றன. விரிந்து கொண்டிருக்கும் நமது பிரபஞ்சத்தைப் போல பல பிரபஞ்சங்கள் நாம் வாழும் இதே கணத்தில், நமது பிரபஞ்சத்துக்கு வெளியில் விரிந்து கொண்டிருந்தால், அப்பிரபஞ்சங்களுக்கும் நமது பிரபஞ்சத்துக்குமிடையில் ஒரு பாதையொன்றினை அமைப்பதற்குரிய சாத்தியமொன்றிருந்தால் அவ்விதமானதொரு தப்பிப்பிழைத்தலுக்கும் சாத்தியமொன்றுண்டு. இதுபோன்ற பலவிடயங்களை விபரிக்கவும், வினாக்களுக்கு விடையளிக்கவும் இயற்பியல் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கும் கோட்பாடுகளை விபரிக்கும் நூலிது.
முக்கியமாக பரிமாணங்களை மீறிச் சிந்திப்பதன் மூலம், முப்பரிமாண உலகை மீறிப் பல்பரிமாண உலகில் வைத்து இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் நிகழ்வுகளை ஆய்வதன் மூலம் மிகவும் இலகுவாக தற்போது முடியாதுள்ள விடயங்களைச் சாத்தியமாக்க முடிகிறது. அவ்விதமான பல்பரிமாண வெளியே 'ஹைபர் ஸ்பேஸ்' அல்லது' 'அதிவெளி'. பல்பரிமாணங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளான ஈர்ப்பு, மின்காந்த, பலமான மற்றும் பலஹீனமான கதிரியக்க விசைகளையெல்லாம் ஒரு தத்துவத்தின் கீழ் விபரிக்க முடிகிறது. மேற்படி நான்கு விசைகளும் ஒன்றேயென்பதை காந்தவிசையினையும், மின்விசையினையும் ஒன்றுபடுத்த முடிந்ததைப் போல ஒன்றுபடுத்த முடிகிறது. அதே போல் நம்முப்பரிமாண உலகில் வெறுமையாகக் காட்சியளிக்கும் வெற்றிடமானது உண்மையில் வெற்றிடமேயில்லை. ஐந்தாவது பரிமாணத்தில் அதிரும் இயல்புகளைக் கொண்டது. நம் பரிமாணங்களை மீறிய நிலையில், ஐந்தாவது பரிமாணத்தில் அதிரும் இயல்பினைக் கொண்டது ஒளி. இவ்விதமான ஐந்தாவது பரிமாணத்தில் அதிரும் ஒளியால் இயல்பாகவே , அப்பரிமாணத்தில் அதிர்ந்து கொண்டிருக்கும் வெற்றிடத்தில் பயணிக்க முடிகிறது. (நாம் வாழும் முப்பரிமாண உலகுடன், நேரத்தையும், இன்னுமொரு 'பரப்பு சம்பந்தமான பரிமாணமொன்றி'னையும் - Spatial Dimension -கூட்டுவதால் ஏற்படுவதே ஐந்தாவது பரிமாணம்.] இவ்விதமானதொரு ஐம்பரிமாண உலகில், வெளியில் மின்காந்த அலையான ஒளியினையும், ஈர்ப்பு விசையினையும் மிகவும் இலகுவாகவே ஒன்று படுத்த முடிகிறது. ஐன்ஸ்டைன் சூழலை மீறிச் சிந்தித்து வெளிநேரப் பிரபஞ்சம் பற்றிய தனது கோட்பாடுகளை அறிவித்து நவீன இயற்பியலைப் புரட்சிகரமாக்கினார். ஐன்ஸ்டைனின் வழியில் பல்பரிமாணங்களை அடிப்படையாக வைத்துச் சிந்திப்பதன் மூலமே ஐன்ஸ்டனால் முடியாமல்போன அடிப்படை விசைகளை ஒன்றிணைத்தலென்னும் கோட்பாட்டினைச் சாத்தியமாக்க முடியுமென்கிறார் மிஷியோ ஹகு இந்நூலில்.

பல்பரிமாணங்களைக் கொண்டு நம்மிருப்பை விபரித்த முதலாவது கோட்பாடான 'கழுசா-கிளெயின்' (Kaluza-Klein) தத்துவம் தொடக்கம், பொருளானது பத்துப் பரிமாண வெளியில் அதிரும் நுண்ணிய சிறுஇழைகளால் ஆனதென விபரிக்கும் 'சுப்பர் ஸ்ரிங்' (Super String) தத்துவம்வரை பல்வேறு விடயங்களைப் பற்றி விபரிக்கும் இந்நூல் 'காலத்தினூடு பயணித்தல்' (Time Travel) பற்றியும், 'ஜோர்ஜ் பேர்ன்ஹார்ட் ரீமா'னின் (George Bernhard Riemann) உயர்பரிமாணக் கோட்பாடுகள் பற்றியும், அதுவரை கணித உலகில் ஆயிரக்கணக்கான வருடங்களாகக் கோலோச்சிக் கொண்டிருந்த யூகிளிட்டின் கேத்திரகணிதத்தை (Geometry) எவ்விதம் 'ரீமானி'ன் நவீன நாற்பரிமாண கேத்திரகணிதக் கோட்பாடுகள் ஆட்டங்காண வைத்தன என்பது பற்றியும், விசை பற்றிய சேர்.ஐசாக் நியூட்டனின் 'விசை' பற்றிய கோட்பாடுகளை எவ்விதம் 'ரீமா'னின் கோட்பாடுகள் கேத்திரகணிதக் கோட்பாடுகளால் விளக்கி வைத்தன என்பது பற்றியும், இத்தகைய சாதனைகளையெல்லாம் எவ்விதம் 'ரீமான்' உளவியல், பொருளியல் பிரச்சினைகளுக்கு மத்தியில் சாதித்தார் என்பது பற்றியும் ஆராய்கிறது. மிகவும் பிரமாண்டமான தொலைவுகளை உள்ளடக்கிய பிரபஞ்சத்தினை மிகவும் குறுகிய நேரத்தில் கடப்பதற்கு, அதனை நமது அன்றாடப் பயணங்களிலொன்றாக மாற்றுவதற்குரிய வழிவகைகள் உள்ளனவா, நமது பிரபஞ்சம் அழியும் பட்சத்தில் இன்னுமொரு பிரபஞ்சத்துக்குத் தப்பிச் செல்ல முடியுமா போன்ற கேள்விகளுக்கெல்லாம் 'புழுத்துளை' (Wormhole) போன்ற கோட்பாடுகள் மூலம் விடைகாண நவீன அறிவுலகம் முயல்வதை விபரிக்கும் இந்நூல் அறிவுத் தாகமெடுத்து அலையும் உள்ளங்களைக் களிகொள்ளச் செய்துவிடும் நூல்களில் முக்கியமானதொன்று.

நன்றி: திண்ணை.காம், பதிவுகள்.காம், தட்ஸ்தமிழ்.காம்
ngiri2704@rogers.com
13/03/2005

அறிவியற்கதை! 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு!'

- கி.பி.3025இல் ஒருநாள்.

- பொழுது மெல்லப் புலர்ந்தது சேவல்களினது பறவைகளினதோ ஒலிகளேதுமில்லாமலே.

- கி.பி. 2800 அளவிலேயே இந்த நீலவண்ணக் கோளிலிருந்து உயிரினங்கள் அனைத்தும் ,றறிவு போட்ட குதியாட்டத்தில், மனிதனைத் தவிர அழிந்தொழிந்து போய் விட்டன.

- ஒரு சில விருட்ச வகைகளே எஞ்சியிருந்தன.

- மனிதர்கள் மாத்திரை உணவு வகைகள் பாவிக்கத்தொடங்கி மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி விட்டிருந்தன.

- இதற்கிடையில் ஏனைய உயிரினங்களுக்கு ஏற்பட்ட நிலை மனித இனத்துக்கும் ஏற்படும் காலம் வெகு அண்மையில், ஒரு நூற்றாண்டு காலத்துக்குள், அண்மித்து விட்டது. மனிதர்கள்
ஆயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த பூமியின் நிலையினையொத்த கோளமொன்றினைக் காண்பதற்கான தேடுதலை விரைவுபடுத்த வேண்டிய தேவையிலிருந்தார்கள்.

- கதிரவன் 'சிவப்பு அரக்கன்' நிலைக்கு வருவதற்கு இன்னும் பல பில்லியன் வருடங்களிருந்தன. அதுமட்டும் மனித இனம் இங்கிருக்க முடியாத நிலையினை மானுட இனம் ஏற்படுத்தி விட்டது.

- எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ அவ்வளவுக்கு மாசுபடுத்தப்பட்டு விட்டது இந்த அழகிய நீல வண்ணக் கோள்.

- இத்தகையதொரு சூழலில் விஞ்ஞானிகள் அண்டவெளிப்பயணங்களின் வேகத்தினைத் துரிதப்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள்.

- அதில் முன்னணி வகித்த உலகப் புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானி ஆத்மாநாமின் மனம் அன்று மிகுந்த மகிழ்சியுடனும், ஒரு வித பரபரப்புடனுமிருந்ததற்குக் காரணமிருந்தது.

- அவர் ஒரு முக்கிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

- சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த ஆய்வொன்றின் தொடர்சியினைப் பூரணப்படுத்துமொரு நாளை அண்மிக்கும் வகையிலானது அவரது ஆய்வு.

- குறைந்தது ஒளி வேகத்திலாவது செல்லும் வகையில் பிரயாணத்தின் வேகமிருக்க வேண்டும்? கி.பி.2003இல் ஆஸ்திரேலியர்கள் இதற்கான முதல் வித்தினை விதைத்திருந்தார்கள். அதற்கான பலனை அறுவடை செய்யுமொரு காலம் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் ஆத்மாநாமின் முயற்சியினால் அண்மித்துக் கொண்டிருந்தது. அன்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் லேசர் கதிர்களை அழித்து மீண்டும் சிறிது தொலைவில் உருவாக்கிச் சாதனையொன்றினைப் புரிந்திருந்தார்கள். 'தொலைகாவு'தலுக்கான (Teleporting) சாத்தியத்தினை அவர்களின் ஆய்வு அன்று தொடக்கி வைத்திருந்தது. அதன் தொடர்ச்சியான ஆய்வுகளின் விளைவாக இன்று ஆத்மாநாம் ஒரு முழு மனிதனையே 'தொலைகாவு'தல் மூலம் பிரயாணிக்கும் வகையிலானதொரு பொறியினை உருவாக்கி, அதனை வெற்றிகரமாகப் பரீட்சித்துப்பார்க்கவிருக்கின்றார். இதற்காக நகரின் இரு எதிரெதிர் திக்குகளில் சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த இரு ஆய்வு கூடங்களிலுள்ள இரு 'தொலைகாவும்' அறைகள் பாவிக்கப்படவுள்ளன. தொலைகாவும் அறை இலக்கம் 1இலிருந்து தொலைகாவும் அறை இலக்கம் 2ற்கு முழு மனிதரொருவனைக் கடத்துவதற்கான சோதனை அன்று நடக்கவிருந்தது. ஒரு மனிதனின் உடலிலுள்ள, ட்ரில்லியன்கள் கணக்கிலுள்ள மூலக்கூறுகளையெல்லாம் அழித்து மீண்டும் உருவாக்குவதென்றால் அவ்வளவு இலேசான காரியங்களிலொன்றாயென்ன!

- மானுட வரலாற்றில் மிகப்பெரியதொரு பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டவுள்ளார் ஆத்மாநாம். விஞ்ஞானப் புனைகதைகளில், விஞ்ஞானத் திரைப்படங்களில் மட்டுமே நிகழ்ந்து வந்திருந்ததொரு விடயம், இதுவரையில் கற்பனையில் மட்டுமே சாத்தியமாகியிருந்ததொடு விடயம், இன்று அவரது முயற்சியினால் நடைமுறைச் சாத்தியமாகும் தருணம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை மட்டும் வெற்றிகரமாக அமைந்து விட்டால்..... அதனை எண்ணவே ஆத்மாநாமின் சிந்தையெல்லாம் களியால் பொங்கிக் குதித்தது. சரித்திரத்தில், அவரது சாதனை பொறிக்கப்பட்டுவிடும். சாதாரண சாதனையா என்ன? இந்தப் பரிசோதனை மட்டும் வெற்றியடைந்து விட்டால்.... மனிதர் ஒரு சில வருடங்களிலேயே அயலிலுள்ள சூரியமண்டலத்திலுள்ள கோள்களுக்கு பயணிப்பதற்கான சாத்தியம் ஏற்பட்டுிவிடும்.

- அண்டத்தை அளப்பதற்குரிய வல்லமையினை அவரது ஆய்வின் வெற்றி மனிதருக்கு வழங்கிவிடும்.

- எத்துணை மகத்தான வெற்றியாக அது அமைந்து விடும்.

"ஆத்மா! உன்னைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறேன். என்னை இந்தக் கடைசித் தருணத்தில் ஏமாற்றி விடாதேயடா?" இவ்விதம் ஆத்மாநாம் ஒருமுறை தனக்குத்தானே கூறிக்கொண்டார்.
அவர் உண்மையில் தனக்குத்தானே கூறிக்கொண்டாலும் அவர் ஆத்மாவென்று விளித்தது அவரையல்ல. அவரது பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளத் துணிச்சலுடன் வந்ததொரு ஆத்மாவான 'ஆத்மா'வைத்தான். இளைஞனான ஆத்மாவைத்தான்.
ஆத்மாநாம் பத்திரிகையில் சுகாதார அமைச்சினூடாக வெளியிட்டிருந்த விளம்பரத்தைப் பார்த்து முன்வந்திருந்த இளைஞர்களில் அவர் தேர்ந்தெடுத்திருந்தது இந்த ஆத்மாவைத்தான். ஆத்மா உண்மையிலேயேயொரு இயற்பியல்-வானியற் பட்டதாரி. அத்துடன் அத்துறையில் வெகுஜனப்பத்திரிகைகளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவரும் பிரபல்யமான எழுத்தாளன். ஆத்மாநாமின் ஆய்வின் முக்கியத்துவத்தை மனதார விளங்கி, உணர்ந்து, தனது காலகட்டத்துக்கான பங்களிப்பு என அதனைப் புரிந்து முன்வந்திருந்தான். இந்தப் பரிசோதனையில் தன்னை இழப்பதற்குமவன் துணிந்து வந்திருந்தான்.
சரியாக காலை மணி பத்துக்குப் பரிசோதனை ஆரம்பிப்பதாகவிருந்தது. ஆத்மாநாம் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். சரியாக மணி ஒன்பது. ஆத்மாநாமை கூட்டிச் செல்வதற்காக ஆய்வு கூடத்திலிருந்து பணியாட்களிருவர் வாகனத்தில் வந்திருந்தார்கள். தொலைகாவும் அறை இலக்கம் 1இல் ஏற்கனவே ஆத்மாவுட்பட வெகுசன ஊடகவியலாளர்கள் பலரும் வந்து காத்திருந்தனர். முதல் நாளிரவிலிருந்தே அவர்களில் பலர் வந்து கூடாரம் அடித்து விட்டிருந்தார்கள். ஆத்மாநாம் ஆய்வுகூடத்தை அடைந்தபொழுது மணி சரியாக ஒன்பது மணி பதினைந்து நிமிடங்கள். அவரை எதிர்பார்த்து ஆத்மா காத்திருந்தான். ஏற்கனவே அவன் உடல்நிலையெல்லாம் சக வைத்தியர்களால் பரிசோதனைகுட்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு அவன் தகுதியானவனென அவர்களால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருந்தான்.
ஆத்மாநாம் ஆத்மாவைப்பார்த்துக் கேட்டார்: "என்ன திரு.ஆத்மா! பரிசோதனைக்குத் தயாரா?"

ஆத்மா அதற்கு இவ்விதம் பதிலிறுத்தான்: "நான் தயார். நீங்கள் தயாரா?"

இவ்விதம் அவன் கூறியதும், அவனது நகைச்சுவையுணர்வு கண்டு அனைவரும் வியந்து சிரித்தார்கள். ஆத்மா எவ்வளவு நகைச்சுவையுணர்வு மிக்கவனாகவிருக்கிறானென்று மூக்கில் விரல் வைத்து அவனை வாழ்த்தினார்கள்.

ஆத்மாநாம் கேட்டார்: "திரு. ஆத்மா. நீங்கள் வெகுசன ஊடகவியலாளர்களுக்கு ஏதாவது கூற விளைகின்றீர்களா?"

அதற்கு ஆத்மா கூறினான்: "அவர்களேதாவது கேட்கும் பட்சத்தில்"

ஆத்மாநாம் ஊடகவியலாளர்களைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார்: "நீங்கள் திரு.ஆத்மாவிடம் ஏதாவது கேட்கவிரும்புகின்றீர்களா""

அதற்குப் பலர் தங்களது கைகளை உயர்த்தினார்கள்.

ஆத்மாநாம் கூறினார்:" எல்லாருக்கும் பதிலிறுப்பது சாத்தியமில்லை. இருவருக்கு மட்டுமே திரு.ஆத்மா பதிலிறுப்பார்"

ஊடகவியலாளர் ஒருவர் எல்லாரையும் முந்திக்கொண்டு பின்வருமாறு கேட்டார்: "திரு.ஆத்மா! உங்களுக்கு இத்தகையதொரு விஷப்பரீட்சையில் ஈடுபடும் எண்ணம் எவ்விதமேற்பட்டது?"
இந்த ஆயிரம் வருடங்களில் கேள்வி கேட்பதில் மட்டும் இன்னும் இந்த ஊடகவியலாளர்கள் இன்னும் கொஞ்சம் கூடப் பரிணாம வளர்சியின்றியிருந்தார்கள் என்பதற்கு சான்றானதொரு வினா.

அதற்கு ஆத்மா சிறிது யோசித்துவிட்டுக் கீழ்வருமாறு பதிலுரைத்தான்: "இதனை விஷப்பரீட்சையென்று சொன்ன முட்டாள் யார்? இது என் வரலாற்றுக் கடமை. ஆயிரம் வருடங்கள் வாழும் வினாடியையொத்த எம் வாழ்வின் பயனாக இதனை நான் கருதுகின்றேன். சிறுவயதிலிருந்தே அண்டவெளிப்பயணம் பற்றிக் கனவு கண்டு வளர்ந்தவன் நான். அதுதான் முக்கிய காரணம்." [ கி.பி.3000இல் மனிதர்கள் ஆயிரம் வருடங்கள் வரை வாழும் நிலையிலிருந்தார்கள். பிறக்கும் ஒவ்வொருவரும் , இருதயம் தொடக்கம், மூளை தவிர, சகல உடலின் அங்கங்களையும் அடிக்கடி மாற்றுவதன் மூலம் சுமார் ஆயிரம் வருடங்கள் வாழக்கூடியதொரு நிலை நிலவிய காலகட்டம்.]

எல்லோரும் ஆத்மாவின் தைரியத்தை மெச்சினார்கள். இன்னுமொரு ஊடகவியலாளர் கூறினார்: "திரு.ஆத்மா! உங்கள் தைரியத்துக்கு நாம் தலை வணங்குகின்றோம். மானுட குலத்தின் நீட்சிக்குத் தங்கள் பங்களிப்பு வரலாற்றில் பொறிக்கப்படும். உங்கள் பயணம் வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்".

அவரைத் தொடர்ந்து அனவரும் வாழ்த்தி வழியனுப்ப, ஆத்மா தொலைகாவும் அறை இலக்கம் 1ற்குள், விஞ்ஞானி ஆத்மாநாம், மற்றும் அவரது உதவியாளர்கள் சகிதம் நுழைந்தான். வெளியில் ஏனைய மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளெனப் பலர் பார்வையாளர் கூடத்தில் காத்திருந்தார்கள். பரிசோதனை தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன. ஆத்மாநாம் தொலைகாவும் அறை இலக்கம் 2இலிருந்த சக மருத்துவர்களுடன் கதைத்து அங்கு எல்லாம் தயார்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அங்கும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளெனப் பலர் மீள உயிர்த்தெழும் ஆத்மாவை வரவேற்பதற்காகக் காத்திருந்தார்கள்.

ஆத்மாநாம் இறுதியாக ஆத்மாவை பார்த்துக் கூறினார்: "திரு.ஆத்மா! உங்களது இந்தப் பங்களிப்புக்காகத் தலை வணங்குகின்றேன் மானுட இனம் சார்பில். உங்களைப் போன்ற சூழலை மீறிய துணிச்சற்காரர்களால்தான் மானுட இனம் இத்துணைதூரத்துக்கு வளர்ச்சி கண்டுள்ளது. வரலாற்றில் நிலைத்து நின்று விட்டீர்கள் இந்த ஒரு செய்கையின் மூலம். திரு.ஆத்மா உங்களுக்காகத் தலை வணங்குகின்றேன்."

அதற்கு ஆத்மா கூறியவைதான் கீழேயுள்ளவை: "நீங்கள் மிகவும் புகழ்கின்றீர்கள். நான் செய்யும் இந்தச் சாதாரண காரியத்துக்காக என் மனித இனம் பெரும் பயனடையுமானால் அதுவே எனக்குப் பெரு மகிழ்ச்சி".

இதன் பின்னர் ஆத்மா தொலைகாவும் அறை இலக்கம் 1இனுள் விஞ்ஞானி ஆத்மாநாமுடன் நுழைந்தான். அவனைச் சரியாக இருக்கையில் அமர்த்தி விட்டுச் செய்யவேண்டியவை பற்றிய
அறிவுறுத்தல்களை மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்திவிட்டு ஆத்மாநாம் வெளியில் வந்தார். வரும்பொழுது அவர் பின்வருமாறு தமக்குள் எண்ணினார்: 'எத்துணை துணிச்சலான பையன். ஆத்மா நீ வாழ்க!'

சரியாகப் பத்துமணிக்கு விஞ்ஞானி ஆத்மாநாம் தொலைகாவும் அறை இலக்கம் 1இனை இயக்கி வைத்தார்.

அதே கணத்தில் தொலைகாவும் அறை இலக்கம் 2இல் காத்திருந்த விஞ்ஞானிகள் அறைக் கதவினைத் திறந்தார்கள்.

ஒளிவேகத்தில் தொலைகாவுதல் நடப்பதால் ஆத்மாவின் புத்துயிர்ப்பு அதே சமயத்தில் நிகழவேண்டும்.

அறையினைத் திறந்த மருத்துவ விஞ்ஞானிகளை வெற்றிகரமாகத் தொலைகாவப்பட்டிருந்த ஆத்மாவின் ஆத்மாவற்ற ஸ்தூல உடல் வரவேற்றது.


நன்றி திண்ணை.காம்

ngiri2704@rogers.com

அறிவியற் கதை! தேவதரிசனம்!

கண்ணுக்கெட்டியதூரம் வரையில் விரிந்து பரந்திருந்தது இரவு வான். அந்த இரவின் கருமையினைக் கிழித்துக் கொண்டு முழுநிலா. அடிவானில் தெரிந்த வட்டநிலா உண்மையில் நகரின் இன்னுமொரு தெருவிளக்காகத் தொலைவில் தெரிந்தது. அருகில் கட்டிலில் குழந்தையை அணைத்தபடி தூங்கிக் கிடந்த மனைவியின்மேல் ஒருகணம் பார்வை பதிந்து மீண்டது. மீண்டும் ஜன்னலினூடு விரிந்து கிடக்கும் இரவு வான் மீது கவனம் குவிந்தது. வழக்கம் போல் தத்துவ விசாரம். அர்த்தமேதுமுண்டா? வாழ்க்கையின் நிலையாமையினை உணர்ந்த சித்தார்த்தன் துறந்து சென்றான். துறத்தல்தான் கேள்விக்குரிய பதிலா? அப்பொழுதுதான் அந்த அதிசயம் என் கண் முன்னால் நிகழ்ந்தது. எனக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் என்னருகில் இன்னுமொரு மனித உருவமிருப்பதை அப்பொழுதுதான் அவதானித்தேன். வியப்புடன் ஒருவித திகிலும் கலந்ததொரு உணர்வு மேலிட வினவினேன்:

"யார் நீ? எப்பொழுது இங்கு வந்தாய்?"


"நான்?" இவ்விதம் கேட்டுவிட்டு ஒரு கணம் அந்த அந்நியன் சிரித்தான். தொடர்ந்தான்: "விபரிப்பதற்கு அதுவொன்றும் அவ்வளவு சுலபமல்ல நண்பனே! உனக்குப் பொறுமையிருந்தால் சிறிது விளக்குவேன்."

நான் அந்தப் புதியவனை மெளனமாக எதிர்நோக்கி நின்றேன். அவன் தொடர்ந்தான்.

"என் கால்களைப் பார்க்கிறாயா?" இவ்விதம் கூறியவன் தனது ஆடைகளைச் சிறிது உயர்த்தினான். எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. அங்கு பாதங்கள் நிலத்தைத் தொடாமல் அந்தரத்தில் மிதந்ததை அவதானித்ததின் வியப்பின் விளைவே எனது ஆச்சரியத்துக்குக் காரணம்.

வந்தவன் தொடர்ந்தான்" "இப்பொழுது என் கண்களைச் சிறிது நேரம் பார்." பார்த்தேன். ஏற்பட்ட வியப்பு தொடர்ந்தது. அங்கு அசைவற்ற கண்களைக் கண்டேன்.

வந்தவன் மேலும் தொடர்ந்தான்: "இப்பொழுது உண்மை புரிந்ததா?"

நான் சிறிது தடுமாறினேன்: "அப்படியென்றால் நீ.. நீங்கள் தேவர்களில் ஒருவரா?"

அவன்: "பரவாயில்லை! நீ தேவனென்றே கூறலாம். அப்படித்தான் உன்னவர்கள் என்னைக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள என்னை அறிந்தது பூரணமற்றது. கட்டுக் கதைகளால் இட்டு நிரப்பி விட்டார்கள். அறியாததனாலேற்பட்ட விளைவு. உனக்கு உண்மை பகர்வேன். நீ அதிசயித்துப் போவாய். புரிந்து கொள்வாய். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். மேலும் நீ காணும் இந்த உருவம் கூட எனது உண்மையான உருவமல்ல. நான் உன்னுலகுனுள் அடியெடுத்து வைக்கும் சமயங்களிலெல்லாம் இது போன்றுதான் வருவது வழக்கம். சில சமயங்களில் நான் ஆணாகவும் வருவேன். வேறு சில சமயங்களில் நான் பெண்ணாகவும் வருவேன். இன்னுமோர் சமயம் நான் ஆணும் பெண்ணும் கலந்த உருவுமெடுப்பேன்."
அவனே தொடர்ந்தான்: "உண்மையில் உன்னால் ஒருபோதுமே ஒரு நிலைக்குமேல் என்னை அறியவே முடியாது. இருக்கும் உன் அறிவின் துணையுடன் ஓரளவு புரிய மட்டும் தான் முடியும்."

"எனக்கு ஒன்றுமே புரியவில்லையே.." எனக்குச் சிறிது குழப்பமாகவிருந்தது.

"உனக்கு உண்மையில் புரிந்தால் மேலும் குழம்பி விடுவாய்."

"குழப்பமா?"

"ஆம்! கூறுகிறேன் கவனமாகக் கேள்."

சிறிது நேரம் இருவருக்குமிடையில் மெளனம் நிலவியது.

அவனே தொடர்ந்தான்: " நண்பனே! நீ வாழ்ந்து கொண்டிருக்கின்றாயே. இந்த வெளி. கழித்துக் கொண்டிருக்கின்றாயே இந்த நேரம். உண்மையில் இந்தப் பரிமாணங்களுக்குள் சிக்கிக் கிடக்கும் உன்னால் எவ்விதம் உண்மையினை அறிதல் சாத்தியம். உண்மையில் இன்னுமொன்றினையும் அறிந்தால் .."

"அறிந்தால்..."

"உண்மையில் இந்தப் பிரபஞ்சம். நீ காணும் இந்தப் பிரபஞ்சம். நான் என் ஓய்வு நேரத்தில் உருவாக்கியதொரு விளையாட்டு. உன்னைப் போல் தான் நானும் என் இருப்பினைப் பற்றிய விசாரங்களுக்குள் சிக்கிக் கிடந்த வேளை விடை புரியாமல் தவித்த போது ஏற்பட்ட வெறுப்பின் விளைவாக என் முழு அதிகாரத்தின் கீழுள்ளதொரு உலகினைப் படைக்க விரும்பினேன். அதன்பொருட்டு நான் உருவாக்கிய விளையாட்டே நீ காணும் இந்தப் பூவுலகு; அண்டசாரசரங்கள்..எல்லாம். புரிந்ததா?"

"புரியவில்லையே நண்பனே?"

"நீ பரிமாணங்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றாய். அவற்றைக் கடந்தவன் நான். உனது பரிமாணங்களுக்குள் நீ கணினி விளையாட்டுக்களை உருவாக்கி விளையாடுவதைப் போல் நான் என் பரிமாணங்களுக்குள்ளிருந்து உருவாக்கிய விளையாட்டுத்தான் நீ வாழும், நீ காணும், நீ உணருமிந்த உலகு. உன்னவரைப் பொறுத்த அளவில் நான் தேவன். கடவுள். எது எப்படியோ... உன் பரிமாணங்களை மீறியவன் நான். ஆயின் எனக்கும் சில எல்லைகள் உண்டு. உன்னைப் போல் தான் என் பரிமாணங்களுக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்த வரையில் எனக்கும் ஒன்றுமே தெரியாது. அதற்காகவே என் இருப்பும் கழிந்து கொண்டிருக்கிறது. உன்னைப் போன்ற முப்பரிமாணப் பிரபஞ்சத்தின் எந்த மூலைக்குள்ளும் என்னால் உடனடியாக உன்னையொத்த வடிவினை எடுத்து மிக இலகுவாக உட்சென்று பங்கு பற்ற முடியும். உண்மையில் உன்னுடன் இங்கு உரையாடிக் கொண்டிருப்பபதைப் போன்றதொரு தோற்றமே ஒருவித ஏமாற்றுத்தான். நான் உருவாக்கிய இந்த விளையாட்டுக்குள் செல்வதற்காக நான் உருவாக்கியதொரு பொய்யான தோற்றந்தான் இது. உண்மையில் நான் உன்னைப் பொறுத்தவரையில் உருவமற்றவன் எல்லா உருவங்களையும் எந்நேரத்திலும் எடுக்கக் கூடியவன். பரிமாணங்களை மீறியவன். சகலவிதமான பரிமாணங்களுக்குள்ளும் புகுந்து விளையாடக் கூடியவன். இருந்தும் நானும் ஒரு குறிப்பிட்ட பரிமாணங்களை எல்லையாகக் கொண்டவன் தான். உனக்கும் எனக்குமிடையிலான வித்தியாசம்... நீ என்னை விடக் குறைந்த அளவிலான பரிமாணங்களுக்குள் வாழுமோர் ஐந்து அவ்வளவே. வெளியையும் காலத்தையும் உன்னால் என்றுமே மீற முடியாது. ஆனால் அதற்காக உனது பரிமாணங்களுக்கப்பாலெதுவுமில்லையென்று ஆகி விடமாட்டாது. நீ நான் உருவாக்கியதொரு விளையாட்டின் அங்கம் தான். ஆயினும் உன்னைப் பொறுத்த வரையில் இயலுமானவரையில் இருக்கும் சூழல்களுக்கேற்றபடி நீ ஓரளவுக்காகவாது சுயமாக இயங்கும்படி நான் உன்னை, இந்த உலகை, இங்குள்ள அனைத்து உயிர்களையுமே உருவாக்கியுள்ளேன். இந்த எனது விளையாட்டில் காணப்படும் அனைத்துமே சூழலுக்கு ஈடு கொடுத்து தங்களைத் தாங்களே அறிதற்கு, புடமிடுதற்கு முடியும். அதற்கு ஏற்றவகையில் நான் எழுதிய , வடிவமைத்த விளையாட்டு இருப்பதை நீ இங்கு காணும் உயிர்கள் அனைத்தினதும் அடிபப்டை இயல்புகளிலிருந்து இலேசாகப் புரிந்து கொள்ள முடியும்.. ஆனால் முற்றாக அறிந்து கொள்ளல் சாத்தியமற்றது. அந்த வகையில் நீ உருவாக்கும் கம்யூட்டர் வீடியோ விளையாட்டுக்களை விட எனது இந்த விளையாட்டு அதி அறிவியல் நுட்பம் கொண்டது. இந்தப் பிரபஞ்சத்தில் நான் எழுதிய விளையாட்டில் பல இன்னும் தீர்க்கப்படாத குறைகள் உள்ளன. நீ எழுதும் கணினி ஆணைத்தொடர்களில் காணப்படும் வழுக்கள் போன்றவைதான் அவையும். குறைகளற்ற 'புறோகிறாம்'கள் ஏதேனும் உண்டா. ஆனால் உன்னைப் போல் நான் எனது இந்த விளையாட்டின் பிரச்சினைகளில் தலையிட்டுத் திருத்துவதில்லை. உன்னைப் போல் புதிய புதிய பதிப்புக்களை வெளியிடுவதில்லை. எனது படைப்புக்களான உங்களிடமே அதற்குரிய ஆற்றலையும் கூடவே சேர்த்தே படைத்துள்ளேன். நீ சுயமாக இயங்கும் இயந்திர மனிதர்களை, 'ரோபோட்'டுக்களைப் படைப்பதை ஒத்ததிது. உனது அறியும் ஆற்றல் எனது முக்கியமான அம்சங்களிலொன்று. அதனை நீ எவ்விதம் பாவிக்கின்றாயென்பதில் தான் உனது பிரபஞ்சத்தில் காணப்படும் சகல பிரச்சினைகளுக்கும் உரிய வழிவகைகள் உள்ளன."
இவ்விதம் கூறிய எனது படைப்புக்குக் காரணகர்த்தா மேலும் கூறினான்: "இப்பொழுது சிறிது நேரம் என்னுடன் பயணிக்க உனக்கு விருப்பமா? விரும்பினால் இன்னும் சிறிது உண்மையினை உனக்குக் காட்ட என்னால் முடியும்."

எனக்கு இடையிலொரு சந்தேகம் எழுந்தது. கேட்டேன்: "உன் படைப்பிலொரு அற்பப் புழுவான என்மேல் ஏனிவ்விதம் பரிவு காட்டுகின்றாய்? ஆர்வம் கொள்கிறாய்?"

அதற்கு அவன் சிரித்தான்: "யார் சொன்னது உன்மேல் மட்டும் தான் இவ்விதம் ஆர்வம் காட்டுகின்றேனென்று. இது போல் உன்னவர் பலபேரிடம் அவ்வப்போது நான் இரக்கம் கொண்டு காட்சியளிப்பதுண்டு. அறிதலுக்கு உதவுவதுண்டு. பொதுவாக என் அறிவின் குழந்தைகளான உங்களில் எவரெவர் சிந்திக்கும் ஆற்றலைப் பாவித்துச் சூழலை மீறிச் சிந்திக்க விளைகின்றார்களோ அவர்களிடத்தில் எனக்கு மிகுந்த பாசம் உண்டாவதை என்னால் ஒருபோதுமே தவிர்க்க முடிவதில்லை. அவர்களுக்கு உதவுவது எனக்கு மிகவும் உவப்பானதொரு பொழுதுபோக்கு. எனது படைப்புகளின் திறமை கண்டு நானே அத்தகைய சமயங்களில் பிரமிப்பதுண்டு. நான் உருவாக்கிய விளையாட்டின் அடிப்படையினைப் புரிந்து கொள்ள நீங்கள் முனைவது எனக்கு என் விளையாட்டின் சிறப்பினை எடுத்துக் கூறும் முக்கியமான செயல்களிலொன்று. நன்கு இயங்கும் உனது 'புறோகிறாம்' கண்டு நீ வியப்பது, களிப்பது போன்றது தான் இதுவும். பயணத்தைத் தொடங்குவோமா?"

ஆமெனத் தலையசைத்தேன்.

என் கடவுள் , தேவன் (எப்படி வேண்டுமானலும் நீங்கள் கூறிக் கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபணையேதுமில்லை) தொடர்ந்தான்: "இப்பொழுது நான் உன்னை என் பரிமாணங்களுக்குள் காவிச் செல்லப் போகின்றேன். உன் நகரின் முக்கியமான, பலத்த காவலுள்ள சிறைச்சாலையொன்றிற்குச் செல்லப் போகின்றேன். மிகவும் பயங்கரமான காவலுள்ள அச்சிறைச்சாலையில் பல பயங்கரச் செயல்களைப் புரிந்த உன்னவர்களை உன்னவர்கள் அடைத்து வைத்திருக்கின்றார்கள்."

இவ்விதம் அவன் கூறியதைத் தொடர்ந்து என்னைக் கடவுள் தன் பரிமாணத்தினுள் எடுத்துச் சென்றான். அதே கணத்திலேயே நானும் அவனும் என் நகரின் முக்கியமான அந்தச் சிறைச்சாலையினுள் நின்றோம். சிறைக்கைதிகளுக்கு மத்தியில் நாம் நின்றோம். ஆனால் அவர்களில் யாருமே எம்மைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இரவானதால் எல்லோரும் துயில்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

"என்ன வியப்பிது. யாருமே எம்மைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லையே" என்றேன்.
அதற்கு அந்தக் காரணகர்த்தா கூறினான்: "அதிலென்ன ஆச்சரியம். நாமிருவரும் இன்னும் எனது பரிமாணத்தினுள் தான் இருக்கின்றோம். அதுதான் காரணம். அவர்களால் தான் அவர்களது பரிமாணங்களை மீறமுடியாதே. நான் இப்பொழுது அவர்களில் சிலரை, உன்னவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானவர்களாகக் கருதப்படும் சிலரை எனது பரிமாணத்தினுள் காவி வரப் போகின்றேன். "

அதனைத் தொடர்ந்து சிலரை அவன் மிக இலகுவாகவே தனது உலகுனுள் எடுத்து வந்தான். சிறைச்சாலையினுள் ஒருவித பதட்டமான சூழல் உருவாகியதை அவதானிக்க முடிந்தது.
கடவுள் கூறினான்: "அவர்கள் தமது உலகிலிருந்து மாயமாக மறைந்த இவர்களைத் தேடுகின்றார்கள். அதுதான் பதட்டத்தின் காரணம்"

"என்ன வழக்கம் போல் கனவுதானா?"

குரல் கேட்கவே திரும்பினேன். எதிரில் துணைவி மரகதவல்லி. எனக்குச் சிறிது குழப்பமாகவிருந்தது. கனவா...இதுவரையில் நிகழ்ந்ததெல்லாம் வெறும் கனவா. இவ்வளவு நேரமும் என்னுடன் இவ்வளவு அறிவுபூர்வமாக உரையாடிக் கொண்டிருந்த கடவுள் கனவுத்தோற்றம் மட்டுமே தானா? இருப்பின் இரகசியத்தினை ஓரளவு அறிந்து விட்டேனென்று களிப்படைந்ததெல்லாம் வெறும் கற்பனை மட்டுமே தானா? இது தான் இவ்விதமென்றால் மறுநாட் காலையோ எனக்கு இன்னும் வியப்பளிப்பதாக புலர்ந்தது. முக்கிய தினசரியொன்றின் அன்றைய காலைப் பதிப்பின் முக்கிய செய்தி பின்வருமாறு தொடங்கியிருந்தது: "சிறைச்சாலையிலிருந்து கைதிகள் மறைவு! மறைவின் காரணம் புரியாத சிறைக் கைதிகள், காவலர்கள் திகைப்பு! பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே வெளியில் மறைந்தனர் கைதிகள் சிலர். கூடு விட்டுக் கூடு பாய்ந்தனரா? விடை தெரியாத புதிர்." அப்படியானால்....?

நன்றி: திண்ணை.காம், பதிவுகள்.காம்
ngiri2704@rogers.com